அண்ணாமலை பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் மோடி
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தை சென்னையிலும், விவசாயிகள் மாநாட்டை கோவையிலும் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.இம்மாதம் 2ம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது, திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். பின், விரிவாக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தையும் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, வரும் 19ம் தேதி, அவர் மீண்டும் சென்னை வர உள்ளார். 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க, பிரதமர் வர வேண்டும் என, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.அதை ஏற்று சென்னை வரும் பிரதமரை, திருப்பூரில் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேச வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அரசு விழாவில் அமைச்சர் உதயநிதியுடன் பங்கேற்று விட்டு, கட்சி பொதுக்கூட்டத்தில், தி.மு.க., அரசை விமர்சிப்பது அரசியல் நாகரிகமல்ல என, மேலிடத்தில் கூறப்பட்டதால், அத்திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.அதற்கு பதிலாக, பிப்., 19ல் கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் விவசாயிகள் மாநாட்டை நடத்த, டில்லி மேலிடத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், கோவையில் பிரதமர் பங்கேற்கும் மாநாட்டை நடத்துவது குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் ஆலோசித்துள்ளார்.இதற்கிடையில், அண்ணாமலையின் பாதயாத்திரையை, பிப்., 10க்குள் முடிக்க, மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. பாதயாத்திரையின் நிறைவு விழாவை சென்னையில் நடத்தவும், அதை லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடத்தவும், பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், ஜன., மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு வருகை தருகிறார். பிப்., மாதமும், கோவை, சென்னை என, அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்க அவர் திட்டமிட்டு உள்ளதால், தமிழக பா.ஜ.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.- நமது நிருபர் -