சென்னை : ''சென்னை ராஜிவ் காந்தி, கோவை, மதுரை, திருச்சி அரசு மருத்துவமனைகளில், குரங்கம்மை பாதிப்புக்கு சிறப்பு வார்டுகள் துவங்கப்பட்டுள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், குரங்கம்மை குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கம், நேற்று நடந்தது. குரங்கம்மை பாதிப்புக்கான சிறப்பு வார்டு திறக்கப்பட்டது.பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: உலக சுகாதார நிறுவனம், 14ம் தேதி குரங்கம்மை பற்றிய நெருக்கடி நிலையை அறிவித்தது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்கா, காங்கோ, நைஜீரியா, பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ், கொலம்பியா, மெக்சிகோ, பிரிட்டன் உள்ளிட்ட, 127 நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் உள்ளன. தொற்றின் காரணமாக, 223 பேர் இறந்துள்ளனர். அந்நாடுகளில் இருந்து வரும் பயணியர் கண்காணிக்கப்படுகின்றனர்.இந்தியாவில் இதுவரை, குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேநேரம், சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய அரசு மருத்துவமனைகளில், குரங்கம்மை சிகிச்சை அளிக்க தலா 10 வார்டுகள் துவங்கப்பட்டுள்ளன. நாடு முழுதும், 35 ஆய்வகங்களில் குரங்கம்மை கண்டறிதல் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. 1958ல் கண்டறியப்பட்ட பெரியம்மை நோயின் தொடர்ச்சி தான், குரங்கம்மை என்பதால், அதே சிகிச்சை முறை அளிப்பதற்கு, 200 டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மழைக் காலம் என்பதால், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.