வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கைகோர்ப்பதில் தவறில்லை ... ஆனால்
நாம் தமிழர் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் இணைந்து, 'தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் அரசியல் அதிகாரத்திற்காக, தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் இணைந்து, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட திட்டமிட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சியில், சிறப்பாக பேசக்கூடிய மேடை பேச்சாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திறம்பட செயல்படும் நிர்வாகிகளை வளைக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அதன் விளைவாக, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கோவை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகி உள்ளனர். அதில், கோவை மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்.மற்ற மாவட்டத்தினர், தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை துவங்கி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:சீமான் மட்டுமே தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை என, தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களை நம்ப வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். இதை வைத்து, நிறைய நிதியும் திரட்டப்பட்டது. ஆனால், சீமானின் அரசியல் நடவடிக்கைகள் நேர்கொண்டதாக இல்லை. அது, அவரை நம்பி அரசியல் பயணம் மேற்கொண்ட, எங்களைப் போன்றவர்களை வெகுவாக பாதித்துள்ளன. அதனால், அவரை நம்பி தொடர்ந்து அரசியல் செய்ய விருப்பமில்லாததால், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விட்டோம்.தமிழ் மண்ணில் துாய தமிழ் தேசிய அரசியல் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். திருச்சி உழவர் சந்தை திடலில், மாவீரர் நாள் பொதுக்கூட்டம், கடந்த 27ம் தேதி நடத்தினோம். வேல்முருகன் பங்கேற்ற அந்த கூட்டத்தில், சீமானுக்கு வழக்கமாக கூடும் கூட்டம்போல் மக்கள் கூடினர். நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தோரும் பெரும் அளவில் வந்தனர். கன்னியாகுமரி, அரக்கோணம், ராமநாதபுரம், தென்காசி, மதுரை, தேனி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மீதான அதிருப்தியில் இருப்போரும் பங்கேற்றனர். தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கமும், தமிழக வாழ்வுரிமை கட்சியும் இனி, மக்கள் பிரச்னைகளுக்காக அரசியல் ரீதியில் இணைந்து செயல்படும். நிறைய பொதுப் பிரச்னைகளுக்காக குரல் எழுப்பி, உண்மையான தீர்வுக்காக போராடுவது என முதல் கட்டமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
கைகோர்ப்பதில் தவறில்லை ... ஆனால்