சென்னை: ''தவறு செய்தவர்களை காப்பாற்ற, பா.ஜ., ஒன்றும் நீதிமன்றம் இல்லை; ஒரு அரசியல் கட்சி,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: கரூரில் விஜய் வரும்போது, ஏன் மின் தடை ஏற்பட்டது; ஏன் அவர்கள் கேட்ட இடத்தில் அனுமதி தரவில்லை; இதற்கு முதல்வர் பதில் சொல்வாரா? கரூருக்கு முதல்வர் எப்படி இரவோடு இரவாக புறப்பட்டு சென்றார். மாலை, 5:00 மணிக்கு பின், பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. ஆனால், கரூரில் இரவில் பிரேத பரிசோதனை செய்தது எப்படி? தி.மு.க., சதி தவறு செய்தவர்களை காப்பாற்ற, பா.ஜ., ஒன்றும் நீதிமன்றம் இல்லை; ஒரு அரசியல் கட்சி. நீதிமன்றம் நேர்மையான தீர்ப்புகளை வழங்க வேண்டும். பா.ஜ.,வுடன் விஜய் கூட்டணி சேர்கிறார் என பரப்பப்படும் தகவல், தி.மு.க.,வின் சதி. மக்களின் நன்மதிப்பை இழந்து, வெகுஜன விரோதியாக தி.மு.க., மாறி இருக்கிறது. ஏற்கனவே, பலமான கூட்டணியை தி.மு.க., வைத்திருந்தாலும், அ.தி.மு.க., தான் வெற்றி பெற்றது. தற்போது, தேர்தல் வந்தால் ஒரு தொகுதியில் கூட, தி.மு.க.,வுக்கு 'டிபாசிட்' கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார். நாகேந்திரனின் மற்றொரு அறிக்கை: விழுப்புரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட, பல மாவட்டங்களில் உள்ள வரலாற்று பெருமை வாய்ந்த கல் மண்டபங்கள் முறையான பராமரிப்பின்றி, சிதிலமடைந்து காணப்படுகின்றன. ஒரு காலத்தில் நெடும் பயணம் மேற்கொள்ளும் மன்னர்களும், வழிப்போக்கர்களும் தங்கி இளைப்பாறும் அன்னச் சத்திரங்களாக விளங்கிய கல் மண்டபங்கள், தி.மு.க., ஆட்சியில் சமூக விரோதிகளின் கூடாரமாக நிலைகுலைந்து கிடக்கின்றன. பேனா சிலை தமிழ் மொழி, தமிழ் பண்பாட்டின் காவலர்களாக தம்மை முன்னிறுத்தும் முதல்வர் ஸ்டாலின், தமிழ் மன்னர்களின் கலைநயத்தையும், கருணை உள்ளத்தையும் பறைசாற்றும் கல் மண்டபங்களை கண்டுகொள்ளாமல், அசட்டை செய்வது ஏன்? தன் தந்தைக்கு கோடிக்கணக்கான செலவில் பேனா சிலை வைப்பதிலும், தன் மகனுக்காக 'கார் ரேஸ்' நடத்துவதிலும் ஆர்வத்துடன் செயலாற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு, வரலாற்று எச்சங்களாக மிஞ்சி நிற்கும் கல் மண்டபங்களை பாதுகாக்க தோன்றவில்லையா? தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை அரசு புதுப்பித்து, மறுசீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.