உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 2.20 கோடி வீடுகளுக்கு பைப் லைனில் இயற்கை எரிவாயு

தமிழகத்தில் 2.20 கோடி வீடுகளுக்கு பைப் லைனில் இயற்கை எரிவாயு

சென்னை: ''தமிழகத்தில் 17,000 வீடுகளுக்கு, குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது; இது, 2030க்குள், 2.20 கோடி வீடுகளாக உயரும்,'' என, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரிய தலைவர் அனில்குமார் ஜெயின் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும், 'பைப் லைன்' எனப்படும், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.இது, பெட்ரோல், டீசல், நிலக்கரி, எல்.பி.ஜி., எரிவாயுஆகியவற்றுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

6 சதவீதம்

இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. மற்ற எரிபொருளுடன் ஒப்பிடும் போது செலவும் குறைவு.உலகளவில் இயற்கை எரிவாயு பயன்பாடு 25 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் 6 சதவீதமாக உள்ளது.வரும் 2030க்குள் இயற்கை எரிவாயு பயன்பாட்டைஅதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கச்சா எண்ணெயில் இருந்து எல்.பி.ஜி., காஸ் தயாரிக்கப்படுகிறது. இது, 100 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளது. இயற்கை எரிவாயு 50 சதவீதம் உள்நாட்டில் கிடைக்கிறது; மீதி 50 சதவீதம் தான் இறக்குமதி செய்யப்படுகிறது.தமிழகத்தில் எண்ணுார், கேரளாவில் கொச்சி உட்பட பல இடங்களில், திரவ நிலை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில், இந்த முனையங்களுக்கு திரவ நிலையில் இயற்கை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.அந்த எரிவாயு, இயற்கை எரிவாயுவாக மாற்றப்படுகிறது. அதை, குழாய் வழித்தடத்தில் வினியோகம் செய்ய, 'சிட்டிகாஸ் டிஸ்ட்ரிபியூஷன்' என்ற வினியோக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அந்நிறுவனங்கள், குழாய் வழித்தடத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயுவாகவும்; சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்கின்றன.

விழிப்புணர்வு

தமிழகத்தில் இயற்கை எரிவாயுவை வினியோகிக்க, 'டோரன்ட் காஸ், அதானி, ஏஜி அண்டு பி' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, 17,000 வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வரும் 2030க்குள், 2.20 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம்செய்யப்படும்.உள்ளாட்சி அமைப்புகள், குழாய் வழித்தடம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும். இயற்கை எரிவாயு பயன்பாடு தொடர்பாக, மக்களிடம் மார்ச் 31 வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

செலவு குறைவு; அதிக மைலேஜ்

தற்போது வாகனங்களுக்கான 1 கிலோ சி.என்.ஜி., எரிவாயு விலை 88.50 ரூபாய். இது, பெட்ரோல், டீசலை விட விலை குறைவு. ஒரு லிட்டர் பெட்ரோலில், கார் சராசரியாக 15 கி.மீ., துாரம் செல்லும்; அதேசமயம், இயற்கை எரிவாயுவில் 30 கி.மீ., செல்லும்.எனவே, இயற்கை எரிவாயு விலைகுறைவாக இருப்பதுடன், அதிக மைலேஜ்தருகிறது. இதனால், பலரும் இயற்கைஎரிவாயுவில் இயங்கும் கார், ஆட்டோவாகனங்களை பயன்படுத்தி வருவதுஅதிகரித்துள்ளது.- ஆர்.சித்தார்த்தன்,துணைத் தலைவர், மார்க்கெட்டிங் பிரிவு,டோரன்ட் காஸ் நிறுவனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ