உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்

புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்

சென்னை: ''இந்தியாவில் செமி கண்டக்டர் தயாரிப்பு தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் இன்று, 5 செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன; முதல் உற்பத்தி தொழிற்சாலை நடப்பாண்டில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். சென்னை ஐ.ஐ.டி.,யின் புத்தாக்க மையத்தின் திறந்தவெளி அரங்கில், மாணவர், மாணவியர் உருவாக்கிய, 60 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார். பின், அவர் பேசியதாவது:பொதுவான கணினி வசதி, இந்தியாவின் ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் நோக்கம். இதன் வாயிலாக உயர்தர செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்க தேவையான சக்தி கிடைக்கும்.இதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ., மாதிரிகளை உருவாக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை, 60 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை இன்னும் பல புதுமையான முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும். ஏ.ஐ., ஆராய்ச்சிகளில் ஆர்வம் உள்ளவர்களை, மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.ஏ.ஐ., வளர்ச்சியில் தரவு தொகுப்புகள் என்பது முதன்மையானவை. அவை இல்லையெனில் பலவீனமாக இருக்கும். எனவே, நம் நாட்டுக்கு நம்பகமான மற்றும் பாதுகாக்கப்பட்ட தரவுத் தொகுப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டு, செயல்பட்டு வருகிறோம்.இந்த பணியின் முக்கிய பகுதியாக, தொழில்நுட்பம் மற்றும் சட்ட அம்சங்களை இணைக்கும் ஒரு புதுமையான நடைமுறையை மேற்கொண்டு வருகிறோம். ஒருவரை போலவே சமூக வலைதளத்தில் சித்தரிக்கப்படும், 'டீப் பேக்' என்ற போலிகளை கண்டறியும் தொழில்நுட்பம் விரைவில் செயல்படுத்தப்படும். இது உண்மைக்கும் போலிக்கும் உள்ள வேறுபாட்டை துல்லியமாக கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க உதவும்.உலக ஏ.ஐ., வளர்ச்சியில், மற்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. ஆனால், நாம் நம் சொந்த ஏ.ஐ., மாதிரிகளை உருவாக்காவிட்டால், வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உருவாகும். ஏ.ஐ., பயன்பாட்டால் விவசாயத்திலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால், சிறிய விவசாயிகள் கூட பயன் பெறுவர்.இந்தியாவில், 'செமி கண்டக்டர்' தயாரிப்பு தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2022 ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி, இந்திய செமி கண்டக்டர் திட்டத்தை துவக்கி வைத்தார். இன்று இந்தியாவில், 5 செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் உற்பத்தி தொழிற்சாலை நடப்பாண்டில் செயல்பாட்டுக்கு வரும்.இந்த திட்டத்தால் டெஸ்லா, வோக்ஸ்வேகன் போன்ற முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்தியாவில் தயாரிக்கப்படும், 'செமி கண்டக்டர் சிப்'களை பயன்படுத்தும் நிலை உருவாகும்.செமி கண்டக்டரில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற, நாட்டின், 100க்கும் மேற்பட்ட பல்கலைகளுக்கு, உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு கருவிகளை இலவசமாக வழங்கி வருகிறோம். இதனால், இந்திய மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உலகின் முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு பெறுவர்.ஏ.ஐ., மற்றும் செமி கண்டக்டர் திட்டத்தில், பிரதமர் மோடிக்கு தெளிவான பார்வை உள்ளது. இதுபற்றிய ஆலோசனை கூட்டங்களில், அவர் அதிக நேரம் செலவிடுகிறார். இளைஞர்கள் மேற்கொள்ளும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், இந்தியாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை - ராஜஸ்தான் ரயில்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பலரும், தமிழகத்தில் வேலை செய்து வருகின்றனர். சிலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு ரயில் சேவைகள் இருந்தாலும், அவை குறைவாகவே உள்ளன. எனவே, சென்னையில் இருந்து ஜோத்பூர் வழியாக ஜாலுாருக்கு, வாரத்திற்கு மூன்று நாட்கள் ரயில் இயக்க வேண்டும் என, சென்னையில் வசிக்கும் ராஜஸ்தான் மக்கள் சார்பில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.''அடுத்த 15 நாட்களில் ரயில் வசதி செய்து தரப்படும்,'' என, அமைச்சர் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mr Krish Tamilnadu
மார் 16, 2025 19:40

மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் போய், இன்று சின்ன சின்ன விஷயங்களும் டேட்டா வாக பதியப்படுகின்றன. இண்டர்நெட் நமது தேடல் தொடர்பான விசயங்களை அள்ளி தருவது போல், தொழில் ரீதியான, கல்வி ரீதியான விசயங்களை கல்வியாளர்களுக்கு ஏ.ஐ. அள்ளி தருகிறது. தவறான தகவல்களின் வழிகாட்டுதல் திட்டமிட்டு நமது மாணவர்களுக்கு ஏ.ஐ. நிறுவன வெளிநாடுகளால் வழங்கப்பட்டால், நமது நாட்டின் அனைத்து மேம்பாடுகளும் ரகசியங்களும் கேள்விக்குறியதாகும். நாம் ஏ.ஐ. மூலம் கேள்விகளுக்கு மூன்று விதமான பதில்களை கேள்விகளுக்கு உருவாக்க வேண்டும். சாஃப்ட் உணர்வு பதில்கள், மீடியம், ஹார்டு உணர்வு பதில்கள். உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு இப்போதே இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்து விட வேண்டும். அபத்தமான பதில்கள் அப்போது தான் வருங்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது.


தஞ்சை மன்னர்
மார் 16, 2025 12:39

நல்ல வேளை செமி கண்டக்டர் எங்க புராணகாலத்திலேயே இருந்தது என்று சொல்லாமல் இருந்தாரே அதுவே பெருசு


Varadarajan Nagarajan
மார் 16, 2025 11:50

மோடியின் தலைமையில் தொழில்வளர்ச்சித்துறை மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது. அந்த துறையின் அமைச்சர் தான் அரசியல்வியாதியல்ல பொறியாளர் என பலமுறை நிரூபித்துள்ளார். மிகவும் துடிப்புடன் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்துறைக்கும் உத்வேகமாக செயல்படுகிறார். மிகுந்த பாராட்டுக்கள். உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கவும் தொழில் துறையில் போட்டியிடவும் தங்களது பணிசிறக்க வேண்டுகிறோம். சாதி, மதம், மொழி, வெங்காயம் என தனது திறனை சிதறடிக்காமல் முழு முனைப்புடன் மேலும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகின்றோம்.


veeramani
மார் 16, 2025 09:29

நாட்டிற்க்கு கிரையோஜெநிக் என்ஜின் உருவாக பங்களித்த தமிழ்நாட்டு விஞ்ஞானியின் கருத்து... கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் தேவைதான். ஆனால் மனித இனம் பல காலம் உயிர் வாழ உணவு மேலாண்மை உடனடி தேவை. எவரும் மாத்திரைகளை உண்டு வாழ இயலாது. புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தும்போது அந்த தொழிலின் தண்ணீர் தேவையை நிச்சயம் கணக்கீடு செய்தல் வேண்டும். தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். பொதுவாக இறைச்சி, பெயிண்ட், தோல் பதனீடு போன்றவற்றிர்கு தண்ணீர் தேவை அதிகம் இவ்வாறான தொழில்களை தவிர்க்கலாம்


நிக்கோல்தாம்சன்
மார் 16, 2025 09:04

தென்னிந்தியாவை முக்கியமாய் தமிழகத்தை கருநாடகாவுடன் நேரடி ரயில் தொடர்புக்கு உதவ வேண்டும்