மகளின் காதலனை கொல்லப்போவது போலீஸ் எஸ்.ஐ.,க்கு முன்பே தெரியும் ஆணவ கொலை வழக்கில் புது தகவல்
சென்னை:தன் மகளின் காதலன் கவினை, மகன் சுர்ஜித் கொலை செய்யப் போகும் தகவல், கைதான போலீஸ் எஸ்.ஐ., சரவணனுக்கு முன்கூட்டியே தெரியும் என்பது, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த, மென்பொருள் நிறுவன ஊழியர் கவின், 27. கடந்த ஜூலை 27ம் தேதி, திருநெல்வேலி கே.டி.சி., நகரில் வெட்டிக் கொல்லப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட போலீசார் விசாரணையில், இது ஆணவக் கொலை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கவின் காதலித்த பெண்ணின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டார் . தொடர் விசாரணையில், சுர்ஜித் பெற்றோரான தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர், போலீஸ் எஸ்.ஐ.,க்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சரவணன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இவரின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். தற்போது, கவின் கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இக்கொலை தொடர்பாக, 58 சாட்சிகளிடம் விசாரித்து உள்ளனர்; 19 வகையான ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். சுர்ஜித், சரவணன் ஆகியோரை காவலில் எடுத்தும் விசாரித்து உள்ளனர். சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'தன் மகளின் காதலனான கவினை கொலை செய்ய இருப்பது, போலீஸ் எஸ்.ஐ.,யான சரவணனுக்கு முன்கூட்டியே தெரியும். இவர் தான், மகன் மற்றும் உறவினர் ஒருவரிடம், இரு சக்கர வாகனத்தில் போலி பதிவு எண் பயன்படுத்துமாறு கூறியிருக்கிறார்' என்றனர்.