| ADDED : ஜன 07, 2025 10:11 AM
சென்னை: கேரளாவின் படகு இல்லங்களைப் போலவே, சென்னை முட்டுக்காட்டிலும், இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் இன்று (ஜன.,07) முதல் செயல்படத் தொடங்குகிறது. இந்த உணவகத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையை பொருத்தவரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இடமாகவே இருந்து வருகிறது. தொடர் விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்களில், கிழக்கு சாலையில் இருக்கும் சுற்றுலா தளங்கள் மற்றும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இங்கு, ரூ.5 கோடியில், 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மிதக்கும் கப்பல் உணவக உரிமையாளர் கூறியதாவது: சர்வதேச பயணிகள் உட்பட உள்ளூர் சுற்றுலா பயணிகள் வரை அனைவரையும் கவரும் வகையில், மெனுவை வடிவமைத்துள்ளோம். விருந்தினர்கள் படகு இல்லத்திலிருந்து பழைய மகாபலிபுரம் சாலை (OMR) நோக்கி மூன்று கி.மீ., படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடையலாம்.பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, படகில் உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் உள்ளன. காலை 7:30 மணிக்கு உணவகம் செயல்படத் துவங்கும். இரவு 11 மணிக்கு மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.