உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்த 19 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ., விசாரணை

பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்த 19 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ., விசாரணை

சென்னை : ஐ.எஸ்., மற்றும் அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினரால் மூளைச்சலவை செய்யப்பட்ட 19 பேரின் வீடுகளில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், விசாரணை நடத்தி தகவல்களை திரட்டி உள்ளனர்.இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும், மத அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபடுவோர்; வெவ்வேறு பெயர்களில் அமைப்புகள் துவங்கி, வாலிபர்களை மூளைச்சலவை செய்வோர் போன்றோரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்து, ரகசிய கூட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். இவர்கள், கோவையில் உள்ள அரபி கல்லுாரியை, பயங்கரவாத பயிற்சி களமாக பயன்படுத்தி வந்ததை கண்டறிந்தனர். அதன் தொடர் நடவடிக்கையாக, தமிழகம் முழுதும், ஐ.எஸ்., மற்றும் அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத ஆதரவு அமைப்பினர் குறித்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

இதுகுறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, தஞ்சாவூர் என, பல மாவட்டங்களை சேர்ந்த 19 இளைஞர்கள், பயங்கரவாத ஆதரவு அமைப்பினரால், மூளைச்சலவை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்களின் வீடுகளில் விசாரணை நடத்தி, தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன.அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. விசாரணையில், மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களை, கல்வியை தொடரச் செய்வது, சுய தொழில் செய்வது என நல்வழிப்படுத்தி உள்ளனர். எனினும், அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மே 30, 2025 11:41

கொஞ்சமாவது சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தவறானவர்களுக்கு ஊக்கமளிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.


S Lakshmana Kumar
மே 30, 2025 09:45

அது தான் அடிப்படை வாதம் என்பது.


A P
மே 30, 2025 09:01

இந்த பயங்கரவாதிகளின் விஷயத்தில் கருத்து தெரிவிக்க, இதுவரை எந்த வாசகரும் முன் வரவில்லை என்பது, கொடுஞ்செயல்களில் ஈடுபடுவோரிடம் எதுவும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று ஒதுங்குகிறார்களோ என்றே தோன்றுகிறது. பஹல்காம் நிகழ்ச்சி போல, தொந்தரவு கொடுக்காத ,சும்மா இருக்கிற, சக மனிதர்களை அழிக்க எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியல. எவ்வளவு கொடுஞ்செயல் என்பது நினைத்துப் பார்க்கவே கூசுகிறது.