உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நித்யானந்தாவின் மேல் முறையீட்டு வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நிவாரணம் தேட உத்தரவு

நித்யானந்தாவின் மேல் முறையீட்டு வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நிவாரணம் தேட உத்தரவு

மதுரை: 'மதுரை ஆதினம் மடத்திற்குள் நுழையக்கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பைசல் செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'இரு தரப்பிலும் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சிவில் வழக்கு மூலம் நிவாரணம் தேடிக் கொள்ளலாம்' என, உத்தரவிட்டது. மதுரை, ஜெகதலப்பிரதாபன் 2017ல் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதினம் மடத்தின், 292வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்தார். திருவண்ணாமலை மற்றும் பிடதியில் தியான பீடம் நடத்திய நித்யானந்தா, தன்னை மதுரை ஆதினம் மடத்தின், 293வது மடாதிபதியாக 2012ல் அறிவித்தார். பின், மடத்திலிருந்து வெளியேறினார். மதுரை ஆதினம் மடம் நிர்வாகத்திற்குள் நித்யானந்தா எவ்விதத்திலும் தலையீடு செய்ய, மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். தனி நீதிபதி, 'மதுரை ஆதினம் மடம் மற்றும் அதற்கு கீழ் உள்ள கோவில்களுக்குள் நித்யானந்தா நுழையக்கூடாது' என, 2018 மார்ச் 5ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நித்யானந்தா மேல்முறையீடு செய்தார். 2018 மே, 30ல் இரு நீதிபதிகள் அமர்வு, 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, தெரிவித்தது. வழக்கை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. நித்யானந்தா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆதினம் மடம் நிர்வாகம், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த இரு சிவில் வழக்குகள், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அங்கு இருதரப்பிலும் தத்தமது உரிமைகள் தொடர்பாக ஆவணங்கள், ஆதாரங்களை சமர்ப்பித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம். அந்நீதிமன்ற விசாரணையை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த கருத்துகள் கட்டுப்படுத்தாது. சுதந்திரமாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை