சென்னை: 'டெங்கு, மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: கடந்த நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு 16,500-க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒன்பது பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில், டெங்கு காய்ச்சலால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், டெங்குவை கட்டுப்படுத்த, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைகள், வீடுகள், சாலையோரங்களில் உள்ள பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பழைய பிளாஸ்டிக், பாத்திரங்கள் ஆகியவற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர். அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், தேவையான மருந்து, மாத்திரைகளை, மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும். எப்போதுமே தும்பை விட்டு வாலை பிடிக்கும்கதையாக, மக்கள் பாதிக்கப்பட்ட பின் நடவடிக்கைஎடுக்கிறோம் என சால்ஜாப்பு கூறாமல், இனியாவது முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.