உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேண்டாம் சோலார் மின்வேலி! மலையோர விவசாயிகள் எதிர்ப்பு; தண்டவாள தடுப்புகளே உறுதியானது

வேண்டாம் சோலார் மின்வேலி! மலையோர விவசாயிகள் எதிர்ப்பு; தண்டவாள தடுப்புகளே உறுதியானது

பெ.நா.பாளையம் : காட்டு யானைகள், ஊடுருவலை தடுக்க, தமிழக அரசு, ரயில்வே தண்டவாள தடுப்புகளை அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காட்டு யானைகள், விளை நிலங்களுக்குள் புகுந்து, வாழை, தென்னை, சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகின்றன.இதனால், கோவை வடக்கு பகுதியில் உள்ள சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், மடத்தூர், ராமநாதபுரம், தாளியூர், பன்னிமடை, காளையனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தினசரி இரவு நிம்மதி இழந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, வனவிலங்குகள் குறிப்பாக, காட்டு யானைகள் வனத்திலிருந்து வெளியே வருவதை தடுக்க, சோலார் மின்வேலியை கதிர்நாயக்கன்பாளையத்திலிருந்து பொன்னூத்து மலையடிவாரம் வரை, 3 கி.மீ., தூரத்துக்கு வனத்துறையினர் அமைத்துள்ளனர். இந்த வேலியை காட்டு யானைகள் சுலபமாக உடைத்து, வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் வனத்துறை சார்பில் இதுவரை, 30 லட்சம் ரூபாய் செலவழித்து, போடப்பட்ட மின்வேலி பயன்பாடு இன்றி கிடக்கிறது.இது குறித்து, விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் பிரபு கூறுகையில், சோலார் மின்வேலியில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து மழை பெய்வது, மேகமூட்டமான காலகட்டங்களில் சோலார் பவர் குறைந்த அளவிலேயே உற்பத்தியாகும். அப்போது, மின்வேலியில் மின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். யானைகள் சுலபமாக வேலியை உடைத்து வேளாண் நிலங்களுக்குள் புகுந்து விடும். இத்தகைய மின்வேலியால், காட்டு யானைகளை முழுமையாக தடுக்க முடியாது.தற்போது, பொன்னூத்து மலை அடிவாரத்தில் போடப்பட்டுள்ள சோலார் பவர் மின்வேலி பல இடங்களில் பழுதுபட்டு, பயனின்றி கிடக்கிறது. பருவ மழை காலங்களில் செடி, கொடிகள் வேகமாக வளர்ந்து மின்வேலியில் படர்வதால், எர்த் ஆகி, சோலார் பவர் உற்பத்தி பாதிக்கிறது. இதனால் காட்டு யானைகள், சுலபமாக மின்வேலியை உடைத்து கொண்டு, வேளாண் நிலங்களுக்குள் புகும் வாய்ப்பு உள்ளது. எனவே, கர்நாடக, கேரளா மாநிலங்களில் உள்ளது போல, வன எல்லை பகுதியில் ரயில் தண்டவாளங்களை நட்டு வைப்பதால், காட்டு யானைகளின் வரவை முழுமையாக தடுக்க முடியும். இத்திட்டங்கள் அம்மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளன. பணம் கூடுதலாக செலவானாலும், நிரந்தர தீர்வு தரும் இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசு, விவசாயிகளுக்கு வழங்கும் நஷ்ட ஈடுக்கு பதிலாக, நிலையான தீர்வு தரும் ரயில் தண்டவாளங்களை, வன எல்லையில் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, உடனே முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ