உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வட கிழக்கு பருவமழை 16ல் துவங்கும் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு

வட கிழக்கு பருவமழை 16ல் துவங்கும் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: ''தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வரும், 16 முதல் 18ம் தேதிக்குள் துவங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு 50 செ.மீ., வரை பெய்ய வாய்ப்புள்ளது,'' என, வானிலை ஆய்வு மையத்தின், தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

தென்மேற்கு பருவமழை, அக்., 16 முதல் 18ம் தேதி, இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதேசமயம், வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்று வீசி வருகிறது. இது, கிழக்கு - வடகிழக்கு திசை காற்றாக மாறும்போது, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை, அக்., 16 முதல் 18ம் தேதிக்குள் துவங்குவதற்கான சாத்திய கூறுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில்தான் துவங்கி உள்ளது. இரண்டு ஆண்டுகளை தவிர, மற்ற ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பதிவாகி உள்ளது. நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை வடமாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட அதிகமாகவும் பதிவாகும். தென்மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட குறைவாகவும் இருக்கும். வழக்கமாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் என, 92 நாட்களில், வடகிழக்கு பருவமழை, 44 செ.மீ., பதிவாகும். நடப்பாண்டு, 50 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே, அதிகளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னங்கள் உருவாகி உள்ளன. நடப்பாண்டும் புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. எத்தனை புயல் உருவாகும், எங்கே உருவாகும், தீபாவளி அன்று மழை இருக்குமா என, இப்போது கணிக்க முடியாது. தாழ்வு மண்டலம், புயல் சின்னம் உருவாகும்போது, 20 செ.மீ., வரை மழைப் பொழிவு ஏற்பட, அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. அதற்கான முன்னெற்பாடுகளை, நாட்டின் குடி மக்களாக நாம் எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில், டெல்டா மாவட்டங்களில் மழைப் பொழிவு காணப்படும். வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஒரு மணி நேரத்தில், 10 செ.மீ., மழை பொழிவு இருந்தால், அது மேக வெடிப்பாக கருதப்படும். அது, எங்கு வேண்டுமென்றாலும் பெய்யும். குறிப்பிட்ட இடங்களில் மழைப் பொழிவு இருக்கும் என, 100 சதவீதம் நம்மால் கணிக்க முடியாது. இது, சவாலானது. இயற்கையை, இயற்கையாகதான் பார்க்க முடியும். வரும் 22ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் இதில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர் கூறினார். நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வானிலை ஆய்வு மைய அறிக்கை: வட மாவட்ட கடலோர பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரா, அதை ஒட்டிய பகுதிகள் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில், இன்று கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், அந்த பகுதிகளுக்கு, 'ஆரஞ்சு அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை