உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 2 சதவீதம் குறைவு

 வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 2 சதவீதம் குறைவு

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட, 2 சதவீதம் குறைவாக பெய்துள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: தமிழகத்தில், 2025ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது. இருப்பினும், அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்தில் பதிவாகும் மழை அளவு, வட கிழக்கு பருவமழை கணக்கில் சேர்க்கப்படுகிறது. இந்த வகையில், அக்., நவ., மாதங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகள், 'டிட்வா' புயல் போன்றவற்றால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, டிட்வா புயல் ஏற்பட்ட காலத்தில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக, 44 செ.மீ., மழை பெய்ய வேண்டும். இதில், இந்த முறை, 42 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. அதன் அடிப்படையில், இயல்பைவிட, 2 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மிக அதிகபட்சமாக, திருநெல்வேலியில் இயல்பை விட, 95 சதவீதம் மிக அதிக மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, விருதுநகர், தென்காசி, ராணிப்பேட்டை மாவட்டங்களில், 20 முதல் 59 சதவீதம் வரை, அதிக மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலுார், திருச்சி, கரூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 20 முதல், 59 சதவீதம் வரை, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உட்பட பிற மாவட்டங்களில், இயல்பான அளவுக்கே மழை பெய்துள்ளது. இருப்பினும், வடகிழக்கு பருவக்காற்று இன்னும் விலகவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை

தமிழகத்தில் ஒருசில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்படும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி