உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்ல திட்டங்களை முடக்கும் மாநில அரசுகள்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருத்தம்

நல்ல திட்டங்களை முடக்கும் மாநில அரசுகள்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருத்தம்

கோவை: ''மத்திய அரசு மூலம் நல்ல திட்டங்கள் நிறைவேறி விடுமோ என்ற அச்சத்தில் தான் தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், அந்த திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கி விடுகின்றன,'' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜனரஞ்சகம்

கோவையில் நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி குறித்து ஓட்டல் தரப்பில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது, ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சீனிவாசன், ஜனரஞ்சகமாக பேசினார். அதில் தவறு ஒன்றும் இல்லை. அவர் ஸ்டைலில் பேசினார். அமைச்சர்கள் குழு ஒரு வருடம் எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என தீவிரமாக ஆய்வு செய்தது. இக்குழுவில் பாஜ., ஆளும் மாநில அரசுகளை தவிர்த்து, அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களின் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கலாம் எனக்கூறியுள்ளேன்.

ஆதாயம்

அவரின் கேள்விக்கு நான் அங்கு பதில் அளிக்கவில்லை. உங்கள் மூலம் பதில் அளிக்கிறேன். அவரின் பிரச்னை குறித்து அமைச்சர்கள் குழுமம் பார்த்து கொண்டு உள்ளது. அவர் கேள்வி கேட்டதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதமாக இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். 'பார்த்தீர்களா... ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுவிட்டார். எல்லாரும் சிரிக்கிறார்கள். அவருக்கு என்ன தெரியும்' என்கின்றனர். யாருடைய விமர்சனத்திற்கும் நான் கவலைப்படுவது கிடையாது. ஜிஎஸ்டி., யை எளிமைபடுத்துவதற்கும், மக்கள் மீது அதிக வரி விதிக்காமல் இருப்பதற்கும் முயற்சி செய்து வருகிறோம்.

ஒரு மனதாக

ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழக அமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் உறுப்பினராக உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில், கவுன்சிலில் அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டது. ஒருவர் கூட எதிர்மறையாக பேசவில்லை. அனைவரும் ஒப்புக் கொண்ட பிறகே முடிவு எடுக்கப்பட்டது. ஒரு முறை கேரள அமைச்சர் லாட்டரி மீதான வரி விதிப்பு குறித்து எதிராக பேசினார். அதை தவிர வரிவிகிதம், அமல்படுத்தவது, மாநிலங்கள் இடையிலான விஷயஙகள் குறித்து அனைவரும் ஒரு மனதாக எடுத்தனர்.கவுன்சிலில் எடுக்கப்படும் எந்த முடிவும் நான்கு குழுக்களை தாண்டிவருகிறது. அதில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்ளனர். யாரும் தனியாக எடுக்க முடியாது.

முன்பும் வரி இருந்தது

மருத்துவ காப்பீடு மீதான ஜிஎஸ்டி., குறித்து லோக்சபாவில் பேசி உள்ளேன். அங்கு அனைத்து கட்சிகளும் இந்த வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பும் மருத்துவ காப்பீடு மீது வரி இருந்தது. அனைத்து மாநிலங்களிலும் வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வந்த பிறகு குறைவாக உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் இது குறித்த சர்ச்சை வந்த போது, யாருக்கு சலுகை அளிக்க வேண்டும் என கேள்வி வந்தது. பல கேள்விகளை கேட்டனர். குழுவில் உள்ள அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளது. இதனை யாரும் பயன்படுத்தவில்லை. சுமூகமாக முடிவு எடுக்கப்படுகிறது.

நல்ல திட்டங்கள் முடக்கம்

மத்திய அரசு மூலம் நல்ல திட்டங்கள் நிறைவேறிவிடுமோ என்ற அச்சத்தில்தான், தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் அந்தத் திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கிவிடுகின்றன.

தி.மு.க.,வுக்கு தேசபக்தி இல்லையா?

வெளிநாட்டில் ராகுல், தேசவிரோத சக்திகளுடன் இணைந்து கொண்டு, தேசநலனுக்கு எதிராக பேசிவருகிறார். தனது தோழமைக் கட்சியைக் கண்டிக்கும் அளவுக்கு தி.மு.க.,வுக்கு தேசபக்தி இல்லையா?

பொறுப்பாக பேச வேண்டும்

ஜி.எஸ்.டி., பங்கீடாக மத்திய அரசு நிதி தருவதில்லை என ஆட்சியில் இருப்பவர்கள் பொறுப்பற்று பேசக்கூடாது. ஜி.எஸ்.டி., பங்கை கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. பங்களிப்பு போதவில்லை என,நிதிக்குழுவிடம்தான் முறையிட்டு, அந்த விகிதாச்சாரத்தை மாற்றக் கோர வேண்டும்.

ஜி.எஸ்.டி.,க்குள் பெட்ரோல் டீசல்

பெட்ரோல், டீசல் ஆகியவை 'எனாபிளிங் புரவிசன்' என்ற அடிப்படையில் ஏற்கனவே, ஜி.எஸ்.டி., வரையறைக்குள் உள்ளது. அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டு, வரி வரம்பை நிர்ணயத்தால், உடனே அமல்படுத்தத் தயார்.

முதல்வரும் முதலீடும்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்க்க முயல்கிறார்.தமிழகம் மட்டுமல்ல, எந்த மாநிலம் முதலீட்டை ஈர்த்தாலும் அது வரவேற்கத்தக்கதே. எந்த அளவுக்கு முதலீடு வருகிறது என்பதை பிறகு பார்க்கலாம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Arachi
செப் 13, 2024 15:33

இவரிடம் உள்ள குறை என்னவென்றால் அடுத்தவர்களின் கருத்துக்கு காது கொடுப்பதில்லை. நோவில்லாமல் பதவிக்கு வந்தால் இப்படித்தான் பேசச் சொல்லும். திட்டங்களை எவ்வளவு வல்லுநர்களை வைத்து முடிவெடுத்தாலும் அதனை ஃபீல்டு லெவலில் சோதனை செய்து பார்த்து விட்டுத்தான் விரிவுபடுத்த வேண்டும். தான் பண்ணியது தான் சரி என்பது முதிர்ச்சி இல்லை என்பதைக் காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கையும் அப்படித்தான். எப்படி ஒரே அளவு சட்டை ஒரு வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் பொருந்தாதோ அதுபோன்று எல்லா திட்டங்களும் பல கலாச்சாரம் மற்றும் பல மொழி பேசும் இந்தியா போன்ற நாட்டிற்கு பொருந்தாது. திரு சீனிவாசன் மிக அருமையாக ஒரு சிறிய எடுத்துக்காட்டுடன் விளக்கினார். நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர் தான் நல்ல ஆட்சியாளர்களாக இருக்கமுடியும்.


Kasimani Baskaran
செப் 13, 2024 05:59

ஒருவன் தாய்மொழியை இழந்தால் தனது அடையாளத்தையே இழந்தது போல. திராவிடனுக்கு தாய்மொழி தமிழ் அல்ல - அதனால்தான் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கூடுதலாக ஹிந்தியை திணிப்பதாக பொய் வேறு சொல்கிறார்கள். பல திட்டங்களுக்கு திராவிட லேபல் ஒட்டி மத்திய அரசின் பணிகளை சிறுமைப்படுத்துகிறார்கள்.


தாமரை மலர்கிறது
செப் 13, 2024 01:52

நல்ல திட்டங்களை முடக்கும் மாநிலங்களுக்கு ஒரு பைசா கொடுக்காமல் முடக்க வேண்டும்.


Ramesh Sargam
செப் 12, 2024 20:37

ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் பலர், ஏன் ராகுலின் தேசவிரோத கொள்கையை, அதுவும் வெளிநாட்டில் ஒரு தேச விரோத கொள்கை உள்ள ஒருவருடன் கூட்டு வைத்திருப்பதை எதிர்க்கவில்லை.


Suppan
செப் 12, 2024 19:49

இந்த மாதிரியான வதந்திகளைப் பொருட்படுத்தாதீர்கள் .


T.sthivinayagam
செப் 12, 2024 19:36

சென்னைக்கு தருகிறேன். துத்துக்குடிக்கு தருகிறேன்.ஆனால் இல்லை இதுதானா பிரபஞ்ச சூட்சும்ம்


kannan
செப் 12, 2024 19:29

2000 ரூபாய்க்குள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்தால் 18% GST செலுத்தவேண்டும் என்ற திட்டம் GST குழுவில் இருக்கிறதாமே. பிஜேபி அரசுக்கு ஜே கண்ணன் chennai.


ஆரூர் ரங்
செப் 12, 2024 20:19

முழுசா தெரியாம எழுதக்கூடாது. எல்லா முடிவுகளும் எல்லா மாநிலங்களும் ஒரு மனதாக ஏற்றால் மட்டுமே நடைமுறைக்கு வரும்.


Narayanan Muthu
செப் 12, 2024 19:26

பிஜேபி அரசின் திட்டங்கள் எல்லாமே முதலாளித்துவ பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் பொது மக்கள் விரோத RSS திட்டங்களை அமுல்படுத்தவுமே முன்னிலை படுத்தப்படுகிறது. இவர்களின் நல்ல திட்டங்கள் எல்லாமே மக்கள் விரோத நலன் திட்டங்களாக உள்ளது. இதில் இந்த அம்மணிக்கு வருத்தமாம்.


Dharmavaan
செப் 13, 2024 04:55

மடத்தனமான குருட்டும் போக்கான கருத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை