டி.ஜி.பி., நியமன விவகாரம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
- டில்லி சிறப்பு நிருபர் - டி.ஜி.பி., நியமன விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், புதிய போலீஸ் டி.ஜி.பி.,யை நியமனம் செய்யாமல், பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமனம் செய்ததற்கு எதிராக வழக்கறிஞர் ஹென்றி திபேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பரிந்துரை கிடைத்தவுடன், உடனடியாக டி.ஜி.பி.,யை நியமிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவி ட்டது. இதைத்தொடர்ந்து, புதிய டி.ஜி.பி.,யின் பெயரை இறுதி செய்து, தமிழக அரசுக்கு யு.பி.எஸ்.சி., பரிந்துரை வழங்கியது. ஆனால் அதை ஏற்காமல், தமிழக அரசு வேண்டுமென்றே கால தாமதம் செய்துள்ளது . என வே, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.