கரும்பு டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை அறிவிப்பு
சென்னை:ஒரு டன் கரும்புக்கு 215 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு அறிக்கை:கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலையுடன், தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது. 2024 - -25ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில், '2023- - 24 அரவை பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன்னுக்கு 215 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.அதன்படி மத்திய அரசு, 1 டன் கரும்புக்கு அறிவித்துள்ள ஆதார விலை 2,919.75 ரூபாயுடன், தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத் தொகையாக, 215 ரூபாய் வழங்கப்படும். அதற்காக, 247 கோடி ரூபாய் மாநில நிதியிலிருந்து வழங்கி, தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது.இதனால், தமிழகத்தில் இயங்கிவரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு, 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கிய 1.20 லட்சம் விவசாயிகளுக்கு, டன்னுக்கு 3,134.75 ரூபாய் கிடைக்கும்.கடந்த அரவை பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரை துறை இயக்குனரகத்தால் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழு பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.