கீழடி அகழாய்வு அறிக்கைக்கு அனுமதி கோரும் அதிகாரி
சென்னை:கீழடியின் மூன்றாம் கட்ட அகழாய்வு அறிக்கையை எழுத, முன்னாள் தொல்லியல் இயக்குநர் ஸ்ரீராமன், மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரி உள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறையின் சார்பில், 2014 - 2016 காலகட்டத்தில் இரண்டு கட்ட அகழாய்வுகளை செய்தார், அமர்நாத் ராமகிருஷ்ணா. அவரைத் தொடர்ந்து, மூன்றாம் கட்ட அகழாய்வை செய்தார் ஸ்ரீராமன். அவர், அங்கு குறிப்பிடும்படியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, அகழாய்வை முடித்தார். பின், ஈரோடு மாவட்டம் கொடுமணலில் அகழாய்வு செய்தார்; 2021ல் ஓய்வுபெற்றார். இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணா, தன் அகழாய்வு அறிக்கையை மத்திய தொல்லியல் துறையிடம், 2021ல் சமர்ப்பித்தார். அதை திருத்தும்படி, தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. அது சர்ச்சையாகி, பா.ஜ., - தி.மு.க., இடையிலான அரசியல் பிரச்னையாக மாறி உள்ளது.இந்த சூழலில், மூன்றாம் கட்ட அகழாய்வு செய்த ஸ்ரீராமன், அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணிக்கு அனுமதி அளிக்கும்படி, மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரி உள்ளார்.