உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவம்பர் 1ல் கிராம சபை ஊராட்சிகளுக்கு உத்தரவு

நவம்பர் 1ல் கிராம சபை ஊராட்சிகளுக்கு உத்தரவு

சென்னை:'உள்ளாட்சிகள் தினமான நவ., 1ல், அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பொன்னையா, சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:உள்ளாட்சிகள் தினமான நவ., 1ம் தேதி காலை 11:00 மணிக்கு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மதச்சார்புள்ள எந்த வளாகத்திலும் கூட்டம் நடத்தக்கூடாது.ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களை சிறப்பிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில், குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, மழைநீர் வழிந்தோட வழி ஏற்படுத்த வேண்டும்.தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளின் கரைகளை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒத்திவைக்க கோரிக்கை

இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழு நிர்வாகிகள் கூறியதாவது:தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற, அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, நவ., 1ல் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதே நாளன்று பெரும்பாலான பெண்கள் கவுரி நோன்பு விரதம் மேற்கொள்வதால், அன்று கிராம சபை கூட்டம், நடப்பதை ரத்து செய்ய வேண்டும். மற்றொரு நாளில் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை