உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் மோசடிக்கு பேராசையே காரணம்: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ஆதங்கம்

ஆன்லைன் மோசடிக்கு பேராசையே காரணம்: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ஆதங்கம்

சென்னை : ''ஆன்லைன் வாயிலாக மோசடிகள் நடைபெற, மக்களிடையே உள்ள அறியாமை, அச்சம் மற்றும் பேராசையே காரணம்,'' என, ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், 'சைபர் சொசைட்டி ஆப் இந்தியா' அமைப்பின் சார்பில், சைபர் குற்றவாளிகளிடம் நிதி இழப்பு ஏற்படாமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சைபர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.

அறியாமை

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர், ரிசர்வ் வங்கியின், பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் பிரிவின் பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது:ஆன்லைன் வாயிலாக மோசடிகள் நடைபெற, மக்களிடம் உள்ள அறியாமை, அச்சம் மற்றும் பேராசையே காரணம். வங்கி மற்றும் வாடிக்கையாளர் மீது தவறு இல்லாத பட்சத்தில், ஆன்லைன் மோசடியில் மர்ம நபர்கள் பணத்தை திருடி இருந்தால், அந்த தொகையை வாடிக்கையாளர்களுக்கு வங்கி தான் செலுத்த வேண்டும்; ரிசர்வ் வங்கியின் சட்டம் இதையே வலியுறுத்துகிறது.ஆனால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் மோசடி நடந்திருப்பது குறித்து, மூன்று நாட்களுக்குள், வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். அதற்கு மாறாக, ஏழு நாட்களுக்குள் புகார் தெரிவித்தால், இழந்த தொகையில் குறைந்த அளவே கிடைக்கும். ஏழு நாட்களுக்கு பின் புகார் தெரிவித்தால், அந்த வாடிக்கையாளருக்கு இழந்த பணத்தை கொடுப்பது வங்கிகளின் விருப்பத்தை பொறுத்தது. ஆனால், ஓ.டி.பி., எண் வாயிலாக மோசடி நடந்து இருந்தால், அதற்கு வங்கி பொறுப்பு ஏற்காது. ஏனென்றால், எந்த வங்கியும் வாடிக்கை யாளர்களிடம், ஓ.டி.பி., எண்ணை கேட்பது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

சி.எஸ்.ஆர்., போதும்

நிகழ்ச்சியில், தாம்பரம் கமிஷனர் அலுவலக, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு, கூடுதல் எஸ்.பி., பிரபாகரன் பேசுகையில், ''சைபர் குற்றவாளிகளிடம் இருந்து, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று தான் பணத்தை திரும்ப பெற வேண்டும். ''அதற்கு, எப்.ஐ.ஆர்., என்ற முதல் தகவல் அறிக்கை கட்டாயம் என்ற நிலை இருந்தது. தற்போது, சி.எஸ்.ஆர்., என்ற புகார் ஏற்பு ரசீது இருந்தாலே போதும்,'' என்றார்.

புகார்

சைபர் குற்றத்தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.,யும், சைபர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் செயலருமான பாலு சுவாமிநாதன் பேசுகையில், ''சைபர் குற்றங்கள் குறித்து, பாதிக்கப்பட்ட நபர் தான் புகார் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. ''இனி, வங்கிகளே புகார் அளிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீலிசா ஸ்டெபிலா தெரஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி