பெருந்துறை நகராட்சியானதற்கு எதிர்ப்பு: அமைச்சரிடம் முறையீடு
ஈரோடு:ஈரோடு மாவட்டம், பெருந்துறை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு, தி.மு.க., உட்பட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், 10 பேர் எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் முத்துசாமியிடம் மனு வழங்கினர்.அமைச்சரிடம் மனு வழங்கிய, தி.மு.க., கவுன்சிலர்களில் ஒருவரான சுப்பிரமணியம் கூறியதாவது: சாலையின் ஒருபுறம் பெருந்துறை, மறுபுறம் கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., என உள்ளது. பெருந்துறையை தற்போது நகராட்சியாக அறிவித்தால், வரி உயரும். புதிய திட்டங்கள் கிடைக்கும். கடந்த, 2022 முதல் அரசின் அனுமதிக்காக நாங்கள் அனுப்பிய திட்டங்கள் கிடைக்காமல் நின்று போகும். 10 மீட்டருக்கு அப்பால் உள்ளவர்களுக்கு வரி குறைவு. அவர்களுக்கு திட்டங்களை தர முடியாது. அதிருப்திதான் ஏற்படும்.பெருந்துறை டவுன் பஞ்.,ல் தேவையான அளவு சாலை, கட்டடம், ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட், கூட்டுக்குடிநீர் திட்டம், நவீன மின்மயானம், பாதாள சாக்கடை திட்டம், நீதிமன்றம் உட்பட அனைத்து அலுவலகமும் சொந்த கட்டடம் என திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.மக்கள் தொகையும், பொது நிதியும் எங்களுக்கு அதிகம். நகராட்சியானால் அதிக நிதி கிடைக்கும் என்பதற்காக, ஆதரவு - எதிர்ப்பை காட்டவில்லை.வரும், 2026ல் சட்டசபை தேர்தல் வரும்போது, பெருந்துறை தொகுதிக்குள் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்.,கள் அமைந்து, இரு இடங்களிலும் வேறுபாடு வந்தால், மக்களிடம் எப்படி செல்ல முடியும்?தி.மு.க.,வுக்கு கெட்ட பெயர் வரட்டும் என அ.தி.மு.க., ஆதரிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதுபோல, பல உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்பட்டதற்கு, மாநிலம் முழுதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.