விண்ணப்பித்த இரு நாட்களில் ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவு
சென்னை : 'ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, இரண்டு நாட்களுக்குள், பழங்குடியினருக்கு ஒரு வாரத்திற்குள், ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சமூக நீதித்துறை செயலர் சுப்பையன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மனுக்கள் மீது, சான்றிதழ் அளிக்கும் அலுவலர்கள், விரைவாக நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வருவதாக, அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதை தவிர்க்க, ஜாதி சான்றிதழ் கோரி வரும் மனுக்கள் மீது, ஆதிதிராவிடர் இனத்தவருக்கு இரண்டு நாட்களுக்குள் தாசில்தார்; பழங்குடியினர் இனத்தவருக்கு ஒரு வார காலத்திற்குள், ஆர்.டி.ஓ.,வாலும், ஜாதி சான்று வழங்கப்பட வேண்டும். தீவிர விசாரணை தேவைப்படும் மனுக்கள் மீது, 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விபரத்தை, மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.