மின்சாரம் பாய்ந்து பலியானவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
மதுரை: மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானதில், அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மின் வாரியத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே துாதையை சேர்ந்த அழகம்மாள் தாக்கல் செய்த மனு: என் கணவர் பெருமாள், 2023 பிப்., 3ல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றபோது, மின் ஒயரை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து இறந்தார். எனவே, என் இளைய மகள் ஜெயசித்ராவிற்கு வேலை வழங்க கலெக்டர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், உதவி பொறியாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்தவர் தவறு செய்யவில்லை என்பதாகத் தோன்றுகிறது. மின் விபத்தால் மரணம் ஏற்பட்டால் கருணைத் தொகை வழங்குவது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மனுதாரருக்கு 6 லட்சம் ரூபாய், மகள்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயை கண்காணிப்பு பொறியாளர் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.