உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி: போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க உத்தரவு

கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி: போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கடைகள், வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை குறித்து, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 10க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்து, கடந்த 2019ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் நீட்டிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி, போலீசார் நிர்ப்பந்தம் செய்கின்றனர் என, இந்திய தேசிய உணவக சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ''சமீபத்திய அரசாணை, கடந்த ஜூன் 5 முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும், இரவு நேரங்களில் உணவகங்கள் செயல்படக் கூடாது என, தொடர்ந்து காவல்துறை தெரிவித்து வருகிறது. ''சமீபத்திய அரசாணை குறித்து, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்ப வேண்டும். ''இரவு நேரங்களில் உணவகங்களின் சட்டப்பூர்வமான வணிக நடவடிக்கைகளில், ஊழியர்கள் ஈடுபடுவதை தடுக்கக் கூடாது என்பதை, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., தெரியப்படுத்த வேண்டும்,'' என்றார். காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''காவல்துறை குறுக்கீடு இருந்தால், சம்பந்தப்பட்ட உணவகங்கள், நீதிமன்றத்தை அணுக வேண்டும். ''தனிப்பட்ட நிறுவனங்கள் மீது, குறிப்பிட்ட புகார்களை பெறும்போது மட்டுமே, காவல்துறை தலையிடுகிறது,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, 10 பேருக்கு மேல் பணிபுரியும் கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள், ஆண்டு முழுதும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை குறித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
ஆக 29, 2025 10:34

காவல் துறை மக்களுடன் முதல் தொடர்பு கொள்ள வருவாய் துறை அதிகாரி அனுமதி பெற வேண்டும். நிறுவன அதிகாரிகள் அறியாமல் நேரடியாக புகார் போலீஸ் பெற முடியாது. இந்த நடைமுறை திராவிடர் 5 ஆண்டுகள் நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்த மாற்ற பட்டு விட்டது. போலீஸ், நீதிமன்றத்தில் மக்கள் விவரம் இருக்காது? தற்போது 24 மணி நேர போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆகவே வியாபார நிறுவனங்கள் 24 மணி செயல் படுவதில் போலீஸ் துறைக்கு என்ன கஷ்டம்? போலீஸ் கலெக்டர், கவர்னர் கீழ் செயல்பட வேண்டிய துறை. அரசியல் கட்சிகள் முதல்வருக்கு இதில் பங்கு குறைவு.


சாமானியன்
ஆக 29, 2025 08:23

உத்தரவு ஒருபக்கம் இருக்கட்டும். யாராவது பின்பற்றுகிறார்களா ? இரவு 2 மணிக்கு எந்த கடையிலே சேல்ஸ் நடக்கும்? உயர்நீதி மன்றம் வழக்கறிஞர்கள் வாதம் மட்டுமே கணக்கில் கொள்ளாமல் களத்தில் எப்படி என்ன நடக்குது என்பதை ஆராய்ந்து தீர்ப்பு எழுதட்டும். மக்கட்கு வர வர நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை குறைய இந்த மாதிரி அபத்த தீர்ப்புகளே காரணம். போலிஸ்துறை முதல்வரின் நேரடி கண்கானிப்பில் கீழ் வருகிறது. எத்தனை போலிஸ் தண்டனை பெற்றுள்ளனர். துறைரீதியாக நடக்கும் விசாரணைகள் நாம்கே வாஸ்தே !


Padmasridharan
ஆக 29, 2025 07:16

இரவு வந்தா பல காக்கி உடை காவலர்கள் மக்களை அதட்டி, மிரட்டியடித்து பணம்/பொருள் பிடுங்க போயிடுறாங்க, 24 மணி நேரம் கடைகளை திறந்து வைத்தால் இவங்க குட்டெல்லாம் இப்ப சில பேருக்கு தெரிஞ்சுது எல்லா மக்களுக்கும் தெரிய வரும்னு பயம்தான் காரணம்


rama adhavan
ஆக 29, 2025 04:39

போலீஸ் மட்டும் உடனே புஹார் எழுதி நடவடிக்கை எடுப்பார்களாம். ஆனால் பொது மக்கள் நீதிமன்றம் சென்று தான் தன்னை பல ஆண்டுகள் போராடி விடுவித்துக் கொள்ளவேண்டுமாம். என்ன நீதி இதுஐயா. வேடிக்கையாக இல்லை.


KRISHNAN R
ஆக 29, 2025 03:16

பல குற்றங்கள்...நடந்ததால்.... யார் பொறுப்பு... மக்கள் தான் பழி ஏற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை