சென்னை, குமரி மாவட்ட அ.தி.மு.க., செயலர்கள் நீக்கம்; பழனிசாமி அறிவிப்பு
சென்னை: அ.தி.மு.க.,வில் இரண்டு மாவட்ட செயலர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலராக வி.எஸ்.பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலரான முன்னாள் எம்.பி., வெங்கடேஷ்பாபு, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வி.எஸ்.பாபு ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.எச்சரிக்கை
வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலராக வி.எஸ்.பாபு நியமிக்கப்படுகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலர் ஜான் தங்கம், திருவட்டாறு மேற்கு ஒன்றிய செயலர் ஜெயசுதர்ஷன் ஆகியோர் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலராக ஜெயசுதர்ஷன் நியமிக்கப்படுகிறார்.வெங்கடேஷ்பாபு, ஜான் தங்கம் ஆகியோர் அமைப்பு செயலர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடந்த 24, 25ம் தேதிகளில், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, 'பூத் கமிட்டி' அமைப்பது உள்ளிட்ட கட்சி பணிகளில் திறம்பட செயல்படாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.கூடவே, கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க., தலைவர்களுடன் தொடர்பில் இருந்து, அவர்கள் சொல்லுக்கு ஏற்ப கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது.அப்படிப்பட்டோரை விரைவில் கட்சி பொறுப்புகளில் இருந்து மாற்றி விடுவேன் என்றும் எச்சரித்திருந்தார். கூடவே, கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து, பல திசைகளில் இருந்தும் தொடர்ந்து தகவல்கள் தனக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.தப்ப முடியாது
அவற்றை தீவிரமாக விசாரித்து வைத்திருக்கிறேன்; யாரும் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலர் வெங்கடேஷ்பாபு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலர் ஜான் தங்கம் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
போட்டியாக வி.எஸ்.பாபு
வெங்கடேஷ்பாபுவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபு, தி.மு.க.,விலிருந்து வந்தவர்; அக்கட்சியின் வட சென்னை மாவட்ட செயலராக ஆதிக்கம் செலுத்தியவர். அப்போது, அ.தி.மு.க.,வில் இருந்த சேகர்பாபுக்கும், தி.மு.க.,வில் இருந்த வி.எஸ்.பாபுவுக்கும் இடையே போட்டி இருந்தது. இப்போது, தி.மு.க.,வில் உள்ள அமைச்சர் சேகர்பாபுவுக்கு போட்டியாக வி.எஸ்.பாபுவை பழனிசாமி களமிறக்கியுள்ளார்.வி.எஸ்.பாபு தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவருடைய கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதையடுத்தே, அவர் தி.மு.க.,விலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.