உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்கட்சி மோதலை தடுக்க முடியாததால் தி.மு.க., மீது பழனிசாமி பொய் குற்றச்சாட்டு * ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

உள்கட்சி மோதலை தடுக்க முடியாததால் தி.மு.க., மீது பழனிசாமி பொய் குற்றச்சாட்டு * ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை:'உள்கட்சி மோதலை கட்டுப்படுத்த இயலாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தி.மு.க., மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில், ஏழு சிறப்பு தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை பிடிக்க, காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக புலம்புகிறார். வாடகை கட்டடங்களுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிப்பதை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், தமிழக நிதி அமைச்சர் பங்கேற்று, வரியை குறைக்க, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.ஜி.எஸ்.டி., வாயிலாக பெறப்படும், 64 சதவீதத்தில், 50 சதவிகிதம் அடித்தட்டு மக்களிடம் இருந்தும்; 33 - 40 சதவீதம் நடுத்தர மக்களிடம் இருந்தும்; 3 - 10 சதவீதம் மட்டுமே, பணக்காரர்களிடம் இருந்தும் வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு அமல்படுத்தியபோது, அதை எதிர்க்க துணிவில்லாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இன்று அதைப் பற்றி பேசுகிறார். மத்திய அரசை கண்டித்து பேசாமல், பந்தை தி.மு.க., பக்கம் திருப்பி, 'தி.மு.க.,வினர், மத்திய அரசை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார். மத்திய அரசின் 15வது நிதி ஆணைய அறிக்கையின் படி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்ப, ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. 'துாய்மை இந்தியா, அம்ருத் 20' திட்டங்களுக்கும், இதே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இதை கடைபிடிக்காவிட்டால், 2021 முதல் 2026 வரை வழங்க வேண்டிய, மத்திய அரசின் மானியம் 4.36 லட்சம் கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்படும். துாய்மை இந்தியா, அம்ருத் 20 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாது என, கடுமையான நிபந்தனைகளை, மத்திய அரசு விதித்தபோது, அவர்களுடன் நட்புறவில் இருந்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. தற்போது, சொத்து வரி உயர்வுக்கு, தி.மு.க., அரசுதான்காரணம் என்கிறார் பழனிசாமி. உள்கட்சி மோதல், கூட்டணிக்கு கட்சிகளை ஈர்க்க முடியாத இயலாமை ஆகியவற்றை மறைப்பதற்காகவே தி.மு.க., அரசை, தினமும் குறை சொல்லி கொண்டு இருக்கிறார். அவரது பேச்சை ஒருபோதும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ