உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்புலன்ஸ் டிரைவரை எச்சரித்த பழனிசாமி அ.தி.மு.க.,வினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு

ஆம்புலன்ஸ் டிரைவரை எச்சரித்த பழனிசாமி அ.தி.மு.க.,வினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு

அணைக்கட்டு, ஆக. 23- 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. கடந்த 18ல் வேலுார் மாவட்டம், அணைக்கட்டில் பிரசாரம் செய்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும்போது, கூடியிருந்த கூட்டத்தின் நடுவில் ஆம்புலன்ஸ் வாகனம் புகுந்தது. ஆம்புலன்சைப் பார்த்ததும், 'ஒதுங்கி வழி விடுங்கள்' என பழனிசாமி கூறி, கூட்டத்தை விலக்கினார். கட்சி நிர்வாகி ஒருவர் பழனிசாமியிடம் ஏதோ சொல்ல, சட்டென டென்ஷன் ஆன பழனிசாமி, 'போகும் இடமெல்லாம் ஆம்புலன்ஸ் வருகிறது. திட்டமிட்டு ஆம்புலன்ஸை அனுப்பி, பிரசார கூட்டத்தை குலைக்கப் பார்க்கின்றனர். ஆம்புலன்ஸுக்குள் நோயாளி யாரும் இருக்கின்றனரா எனப் பாருங்க என, கூடியிருந்த தொண்டர்களை ஆம்புலன்சை நோக்கி, முடுக்கி விட்டார் பழனிசாமி. உடனே, கூடியிருந்த தொண்டர்களில் சிலர், சட்டென ஆம்புலன்சை சூழ்ந்து கொண்டு, உள்ளே யாரும் நோயாளி உள்ளாரா?' என ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கேட்டனர். 'நோயாளி யாரும் வாகனத்துக்குள் இல்லை' என டிரைவர் பதில் அளிக்க, அந்த தகவல் உடனடியாக பிரசார வாகனத்தில் இருந்த பழனிசாமிக்குச் சென்றது. இதனால் ஆவேசமடைந்த பழனிசாமி, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க.,வினர் இப்படி செய்கின்றனர். அடுத்த முறை நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டி வருபவரை நோயாளி ஆக்குங்கள்' என எச்சரித்து பேசினார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த சுரேந்திரர் மீது, அ.தி.மு.க.,வினர் வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையறிந்த சுரேந்திரரும் அதே நாளில், அணைக்கட்டு போலீசில் புகாரளித்தார். அதில், 'பொது ஊழியரான தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாரத்தில் பழனிசாமி, மிரட்டும் தொனியில் பேசிய பின் தான், அ.தி.மு.க., தொண்டர்கள் என்னை தாக்கினர்' என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் சுரேந்திரரை தாக்கியதாக, அடையாளம் தெரியாத அ.தி.மு.க.,வினர் ஐந்து பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டி.ஜி.பி.,யிடம் புகார்! அணைக்கட்டு பிரசாரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை நோக்கி, அ.தி.மு.க., பொதுச்செயலர் எச்சரித்த விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், மதுரை, திருவாரூர், கோவை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட மாவட்ட எஸ்.பி.,க்களிடம் புகார் அளித்துள்ளனர். இதே போல, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில், அச்சங்கத்தின் மாநில செயலர் இருளாண்டி தலைமையில், நேற்று புகார் அளிக்கப்பட்டது. புகாரில் கூறியிருப்பதாவது: வேலுார், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வயிற்றுப் போக்கு காரணமாக சிகிச்சை பெற்ற சந்திரா, 60 என்ற நோயாளியை, மேல் சிகிச்சைக்கு வேலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சுரேந்திரர் என்பவர் ஓட்டினார். வேலுார் பிரதான சாலையில், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ், கூட்டத்திற்குள் மாட்டிக் கொண்டது. இதை பார்த்த பழனிசாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பார்த்து, மிரட்டல் தொனியில் பேசினார். உடனே, ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அடையாள அட்டை, மொபைல் போனையும் அ.தி.மு.க.,வினர் பறிக்க முயன்று; அடிக்கப் பாய்ந்துள்ளனர். இது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின்படி, பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை