உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பில்டப் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஊத்தங்கரையில் பழனிசாமி ஆவேசம்

பில்டப் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஊத்தங்கரையில் பழனிசாமி ஆவேசம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேற்று பார்வையிட்ட பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி:வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'பெஞ்சல்' புயலால் தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரை ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீர், பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறுத்தி வைத்திருந்த, 50க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்களை அடித்து சென்றுள்ளது. அதன் உரிமையாளர்கள் அனைவரும் சாதாரண மக்கள்; வாகனத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகின்றனர். ஊத்தங்கரை நகரையொட்டி ஏரிக்கரையோரமுள்ள 55 வீடுகள் மூழ்கியுள்ளன. விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன.இங்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு, தி.மு.க., அரசு உரிய நிவாரணம், பாதுகாக்கப்பட்ட மாற்றிடம் வழங்க வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலின், தன் சமூக வலைதள பக்கத்தில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சென்னை மக்கள் துாக்கத்தை தொலைத்து இருந்தனர்.தற்போது, 24 மணி நேரத்தில் மழைநீர் முற்றிலுமாக வடிய வைக்கப்பட்டுள்ளது' என கூறியுள்ளார்.ஆனால், சென்னையில் 7 முதல் 8 செ.மீ., அளவிற்கு மட்டுமே மழை பெய்தது. அது தானாக வடிந்து விடும். அதே 24 மணி நேரத்தில், விழுப்புரத்தில் மழைநீரை வடிய வைக்க முடியுமா?கடந்த செப்., 20ல் விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் கால்வாயை துார்வார வலியுறுத்தி, அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. கடந்த 2016 அ.தி.மு.க., ஆட்சியில், அங்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரப்பட்டது. அதன்பின், தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்காமல், ஆட்சி அதிகார மமதையில் தமிழக முதல்வர், 'பில்டப்' மட்டும் கொடுத்து வருகிறார். மக்கள் பிரச்னை, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, வானிலை மையத்தின், 'ரெட் அலெர்ட்'டை கவனிக்காததால், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை