| ADDED : பிப் 16, 2024 12:50 AM
சென்னை:''நான் முதல்வராக இருந்த போது, 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - பழனிசாமி: நேற்று முன்தினம் நான் பேசியபோது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், இடையில் ஒரு கருத்தை கூறினார். அ.தி.மு.க., ஆட்சியில், 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டதாக கூறினேன்.அப்போது, அவர், 'நீங்கள் முதல்வராக இருந்தபோது, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட திறக்கப்படவில்லை' என, தவறான கருத்தை பதிவு செய்தார். கடந்த 2017 டிசம்பர் 11ல் வெளியான அரசாணை எண் 467படி, 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன. 2018 மார்ச் அரசாணைப்படி, 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன.நான் முதல்வராக இருந்த போது, 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, அமைச்சர் தவறான குற்றச்சாட்டை இனி பதிவு செய்யக்கூடாது. பதிவு செய்த தவறான கருத்தை நீக்க வேண்டும்.அமைச்சர் சுப்பிரமணியன்: நீங்கள் முதல்வராக இருந்தபோது, புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்ததற்கான அரசாணையை காண்பியுங்கள்.பழனிசாமி: அரசாணையை தருகிறேன் பாருங்கள். நான் முதல்வராக இருந்தபோது தானே வெளியிடப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருந்த போது, 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வரப்பட்டன.சபாநாயகர் அப்பாவு: நீங்கள் தரும் ஆவணங்களையும், அமைச்சர் கூறியதையும் சரிபார்த்து முடிவு செய்கிறேன். எது சரியோ அது சபைக் குறிப்பில் இடம்பெறும்; மற்றவை நீக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.