தமிழகத்தின் நிதி நிலையை தி.மு.க., சீரழித்து விட்டது பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
சென்னை:தமிழகத்தின் நிதி நிலையை தி.மு.க., சீரழித்து விட்டதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசின் மொத்த வருவாய், 2021- - 22ல், 2 லட்சத்து 7,492 கோடி ரூபாய். இது, 2024- - 25ல் 3 லட்சத்து, 11,239 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.  கூடுதல் வருமானம்
கடந்த மூன்றாண்டுகளில், ஜி.எஸ்.டி., வாட், முத்திரைத்தாள் கட்டணம், வாகன வரி, மத்திய அரசின் பங்கு போன்றவற்றிலிருந்து, ஒரு லட்சத்து 3,747 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.இதுதவிர, மின்கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி உயர்வால், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக வருமானம் கிடைத்து வருகிறது. இவை அனைத்தும் மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை சுமத்தியதால் கிடைத்த வருவாய். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது, 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், கடந்த மூன்றரை ஆண்டுகளில், 8 லட்சத்து, 33,362 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, 43 மாத தி.மு.க., ஆட்சியில், 3 லட்சத்து 48,362 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இவ்வளவு கடன் பெற்றும் மூலதனச் செலவுகள் அதிகரிக்கவில்லை. அதிக வருவாய் கிடைத்தும் வருவாய், நிதி பற்றாக்குறை குறையவில்லை. மக்களுக்கான திட்டங்களும், கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், 7,351 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நிதி சீரழிவு
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் தாமதமாகி வருகிறது. பொங்கல் ஊக்கத்தொகை 1,000 ரூபாய் தர பணமில்லை. தி.மு.க., ஆட்சியில், ஒரு புதிய மருத்துவக் கல்லுாரி கூட திறக்கவில்லை. ஆட்சி முடியும் தருவாயிலாவது, நிதி மேலாண்மையில் தி.மு.க., அரசு கவனம் செலுத்தி, நிதி சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், தமிழகத்தை சீரழித்த தி.மு.க., சீரழியும் நாள் வெகு தொலைவில் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.