மதுரை வந்த ரயிலின் பெட்டியில் புகை வந்ததால் பயணியர் பீதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருமங்கலம்: மதுரை நோக்கி வந்த திருவனந்தபுரம் - காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை கிளம்பியதால் பயணிகள் அலறினர்.இதனால் திருமங்கலத்தில் 30 நிமிடம் நிறுத்தப்பட்டு புகை கட்டுப்படுத்தப்பட்ட பின் புறப்பட்டு சென்றது. திருவனந்தபுரத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 11:10 மணிக்கு மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையை கடந்தபோது ரயிலின் 'எஸ் 1' பெட்டியின் கீழ் பகுதியில் இருந்து புகை வந்தது.ரயில் திருமங்கலத்தை நெருங்கிய போது, பயணியர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் திருமங்கலத்தில் ரயில் நின்றது. பயணிகள் அவசர அவசரமாக இறங்கினர். ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்த போது 'எஸ்1' பெட்டியில் பிரேக் ஷூ ரிலீஸ் ஆகாமல் சக்கரத்தோடு உரசியபடி வந்ததால் புகை வந்தது தெரிந்தது. தீயணைப்பு கருவி மூலம் கெமிக்கல் பவுடரை தெளித்தும், பிரேக் ஷூவை ரிலீஸ் செய்தும் புகையை கட்டுப்படுத்தினர். இதையடுத்து 30 நிமிடம் தாமதமாக ரயில் மதுரைக்கு கிளம்பி சென்றது. மதுரை ஸ்டேஷனில் 'எஸ் 1' பெட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிவரக்கோட்டை பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டுப்பன்றி மீது ரயில் மோதியதில் உடல் பெட்டியின் உள்பகுதியில் சொருகி நின்றது தெரிந்தது. இதையடுத்து காட்டுப்பன்றியின் உடல் அகற்றப்பட்டது. இதன் காரணமாக மொத்தம் 50 நிமிடங்கள் தாமதமாக அந்த ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்றது.இந்த ரயில் தாமதத்தால் விருதுநகர் மார்க்கத்தில் இருந்து மதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் கள்ளிக்குடி, விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டன.