உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் தாமதமாகிறது பட்டா மாறுதல்; 30 நாட்கள் அவகாசம் 45 ஆக அதிகரிப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் தாமதமாகிறது பட்டா மாறுதல்; 30 நாட்கள் அவகாசம் 45 ஆக அதிகரிப்பு

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது போல, 'இ -சேவை' மையங்களில் பதிவு செய்யப்படும், பட்டா பெயர் மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அவகாசத்தை, 30ல் இருந்து, 45 நாட்களாக உயர்த்தி, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சொத்து வாங்குவோர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவற்றை பெறவும், 'இ -சேவை' மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் அனுப்பப்படும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.அதற்கு மேல் விண்ணப்பம் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். இருப்பினும், பெரும்பாலான இடங்களில், பட்டா மாறுதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள், 30 நாட்களில் முடிவு எடுக்காமல், நிராகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், பொது மக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.இந்நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்காக முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த மனுக்களை, 'ஆன்லைன்' முறையில் பதிவேற்றம் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது முடிவு எடுக்க, 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.இதை சுட்டிக்காட்டி, 'இ - சேவை' மையங்கள் வாயிலாக பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கைக்கும், 45 நாட்கள் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என, வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற வருவாய் துறை உயரதிகாரிகள், பட்டாவில் பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, 45 நாட்கள் வரை அவகாசம் அளித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வழக்கமான மனுக்களுக்கும், 45 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. அதேநேரம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான, 45 நாட்கள் அவகாசத்தை, 60 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரி க்கையும், துறையின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை