உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ தரவுகளை சேகரித்து ஆராய்ச்சி செய்ய ஆட்கள் அவசியம்

மருத்துவ தரவுகளை சேகரித்து ஆராய்ச்சி செய்ய ஆட்கள் அவசியம்

மதுரை:தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளின்போது கிடைக்கும் தரவுகளை சேகரித்து ஆய்வு மேற்கொள் வதற்கு தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது. தமிழகத்தில், 38 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதன் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவ துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் அதே நேரத்தில், புதுப்புது நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால் தமிழக மருத்துவத் துறை குறித்த சாதனைகள் வெளியுலகிற்கு தெரியவரும்.மத்திய அரசின் ஜிப்மர், எய்ம்ஸ், நிமான்ஸ் போன்ற மருத்துவத் துறை நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கென தனி ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆராய்ச்சி குறித்த விபரங்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன.தமிழகத்தில் நாள்தோறும் ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் சாதனை நடக்கிறது என்றாலும், அவற்றை தொகுப்பதற்கென தனி துணை அமைப்பு இல்லை. தமிழகத்தில் மருத்துவ கல்வி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி என்று பெயர் மாற்றம் பெற்றாலும், ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் தரப்படவில்லை.நிறைய மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள் இயங்குகின்றன. அங்கு ஒவ்வொரு நோயாளிகளுக்கு செய்யப்படும் சிக்கலான ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை பிரமிக்க வைக்கும்.ஒவ்வொரு துறையிலும் டாக்டர்கள் அறுவை சிகிச்சையின் போது, புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு நோயாளிகளை பிழைக்க வைக்கின்றனர். இந்த தரவுகளை சேகரித்து, பிற புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது, புதிய ஆராய்ச்சி முடிவுகள் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.இதையெல்லாம் தொகுத்து சேகரிப்பதற்கு, டாக்டர்களை ஆராய்ச்சிக்கான புள்ளி சேகர தொகுப்பாளர்களாக நியமித்தால், தமிழகம் மருத்துவ துறையில் இன்னும் பல மைல்கல்லை எட்டும் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி