| ADDED : அக் 14, 2024 09:42 PM
சென்னை:முன்னெச்சரிக்கையாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் போட்டால், 'எதற்காக ஆலோசனைக் கூட்டம்' எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவரை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள் என அமைச்சர் நேரு கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் முதல்வர் என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி உளறி அறிக்கை விட்டிருக்கிறார். வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது பற்றி பழனிசாமிக்குத் தெரியுமா? முதல்வர் எடுத்த நடவடிக்கையால் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். 2015 பெரு வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்து அதனை மொத்தமாகத் திறந்துவிட்டு சென்னையை மூழ்கடித்து 289 பேர் பலியாக காரணமானவர்கள் எல்லாம் இன்றைக்குச் சாத்தான் வேதம் ஓதுவது போலப் பேசுகிறார்கள். அப்படியான எந்த நிகழ்வும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் போட்டால், 'எதற்காக ஆலோசனைக் கூட்டம்' எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவரை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்! பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா? எனக் காத்திருக்கிறார் பழனிசாமி. துணை முதல்வர் பதவியை இன்றைக்குப் பரிகாசம் செய்யும் பழனிசாமி, தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்திற்குத் துணை முதல்வர் பதவியை கொடுத்தது ஏன்? தன்னை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி மிரட்டிய போது அவருக்குத் தராமல், தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளப் பன்னீர்செல்வத்திற்குத் துணை முதல்வர் பதவியைக் கொடுத்தது எதற்காக? தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளத் துணை முதல்வர் பதவியையே கேடயமாகப் பயன்படுத்திய பழனிசாமி எல்லாம் 'விளம்பரம்' பற்றிப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமியை யாரோ எழுப்பி தேர்தல் வரப்போகிறது தினசரி அறிக்கை விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் இப்படி அற்பமான காரணங்களைச் சொல்லி அரசியல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் நேரு கூறியுள்ளார்.