உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இனி 4 மணி நேரம் வேலை செய்தால் போதும்

 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இனி 4 மணி நேரம் வேலை செய்தால் போதும்

சென்னை: 'மாற்றுத்திறனாளிகள், 100 நாள் வேலைத் திட்டத்தில், இனி நான்கு மணி நேரம் வேலை செய்தால் போதும்' என, ஊரக வளர்ச்சி துறைக்கு, தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, 2,000 ரூபாயை 6,000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி, தமிழகம் முழுதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், கடந்த 11ம் தேதி, முற்றுகை போராட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகளை, தலைமைச் செயலர் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் பேச்சு நடந்தது. அப்போது, 'மாற்றுத் திறனாளிகள் 100 நாள் வேலை திட்டத்தில், இனி வரும் நாட்களில் நான்கு மணி நேரம் வேலை செய்தால் போதும்' என, தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். இது குறித்து, சங்கப் பொதுச் செயலர் ஜான்சி ராணி கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளின் பிரதான கோரிக்கையான, உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக, தலைமைச் செயலருடன், கடந்த 12ம் தேதி பேச்சு நடந்தது. அதன் படி, டிச., 3 முதல், எங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, 1,000 ரூபாய் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. எனினும், நிதி நிலையை கருத்தில் வைத்து, அரசு இந்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. மாற்றுத்திறனாளிகள் பலருக்கும், பெரும் சவாலாக இருப்பது, 100 நாள் வேலைத் திட்டம். இத்திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் எட்டு மணி நேரம், வேலை வாங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு, 'இனி வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நான்கு மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும். அவர்களுக்கு முழுத் தொகையும் வழங்கப்படும்' என, தலைமைச் செயலர் தெரிவித்தார். இது குறித்து, ஊரக வளர்ச் சித் துறையினருக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி