உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ணசாமிக்கு அனுமதி மறுப்பு : ஆஸ்பத்திரியில் போலீஸ் குவிப்பு

கிருஷ்ணசாமிக்கு அனுமதி மறுப்பு : ஆஸ்பத்திரியில் போலீஸ் குவிப்பு

மதுரை: பரமக்குடி சம்பவத்தில் காயமுற்றோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமுற்ற பரமசிவம், சிவா, செந்தில் முருகன், சதுரகிரி, ஏசு, யோகேஷ் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், இவர்களை போலீசார் ஸ்டிரெச்சரில் வார்டுகளுக்கு அழைத்துச் சென்றனர். கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். காயமுற்றவர்களை முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல்ராஜன் பார்த்து விட்டு திரும்பியபோது, புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி சென்றார். இவருக்கு எதிராக முருகவேல்ராஜன் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். முருகவேல்ராஜன் கூறுகையில், ''அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டது. செப்.,14ல் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார். இதைதொடர்ந்து, நலம் விசாரித்து விட்டு வந்த கிருஷ்ணசாமி கூறுகையில், ''இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்த பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறேன். இச்சம்பவம் சதியா? என அரசு விசாரிக்க வேண்டும். காயமுற்றோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். சிலர் மறியலில் ஈடுபட்டதை போலீசார் எளிதாக கையாண்டிருக்கலாம். இப்பிரச்னையை சட்டசபையில் எழுப்புவேன். அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்லும் வழியில் போலீசார் என்னை தடுத்தனர். பிரச்னையை உணர்ந்து நானும் திரும்பி விட்டேன்,'' என்றார். நீதி விசாரணை தேவை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பரமக்குடியில், சில கோரிக்கைகளை முன்வைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூவர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து, பணியில் உள்ள ஐகோர்ட் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தி, யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ