சரக்கு வாங்க இனி வரிசை பாதுகாப்பு கேட்டு மனு
சென்னை:மது கடைகளில், வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்து, மதுபானங்களை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு அளிக்குமாறும், தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,க்கு, 'டாஸ்மாக்' பணியாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் தனசேகரன் கூறியதாவது: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 2ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதைதொடர்ந்து, மது கடைகளில் சட்ட விதிமுறைகளின்படி பணி செய்யப்பட உள்ளது. கடைகளில் மது வாங்க வருவோரை வரிசையில் நிற்க வைத்து, அமைதியாக விதிமுறைகள் பின்பற்றி பணி செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதற்கு ஏதுவாக, மாநிலம் முழுதும் உள்ள, 4,829 கடைகளில், பணியாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல், தாக்குதல் இல்லாமல் இருக்க, உரிய பாதுகாப்பை போலீ சார் வழங்க வேண்டும். இதற்காக, அரசு தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,க்கு மனு அளித்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.