சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி
சென்னை:சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.'யு டியூபர்' சவுக்கு சங்கர், 'துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் ஊழல் நடக்கிறது; அதன் பின்னணியில் தமிழக காங்., தலைவர் உள்ளார்' என, சமூக வலைதளத்தில் ஆதாரங்களை வெளியிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2istwhfi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில், கடந்த மாதம் 24ம் தேதி அத்துமீறி நுழைந்த கும்பல், அவரின் தாயை மிரட்டி, வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியதுடன், வீடு முழுதும் மனிதக்கழிவு மற்றும் கழிவு நீரை ஊற்றிச் சென்றது.இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சவுக்கு சங்கரின் தாய் கமலா வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'போலீசாருக்கு தெரிந்தே தான் வீடு சூறையாடப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் உள்ளன. சாட்சிகளின் வாக்குமூலங்களை கூட, சி.பி.சி.ஐ.டி., பதிவு செய்யவில்லை. எனவே, விசாரணையை மாற்ற வேண்டும்' என, வாதிடப்பட்டது.சி.பி.சி.ஐ.டி., தரப்பில், 'சவுக்கு சங்கர் வீட்டை சுற்றியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவத்தில், 21 பேருக்கு தொடர்பு உள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களும் கைது செய்யப்படுவர்' என்று தெரிவிக்கப்பட்டது.இதைப்பதிவு செய்த நீதிபதி, 'சம்பவம், 20 நாட்களுக்கு முன் தான் நடந்துள்ளது என்பதால், விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற முடியாது' எனக்கூறி, விசாரணையை சி.பி.சி.ஐ.டி., விரைவாக முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மனுவை தள்ளுபடி செய்தார்.