உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடையில் 2,500 ஏரிகளை புனரமைக்க திட்டம்: நிதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது நீர்வளத்துறை

கோடையில் 2,500 ஏரிகளை புனரமைக்க திட்டம்: நிதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது நீர்வளத்துறை

சென்னை : கோடை காலத்தில், 2,500 ஏரிகளை புனரமைக்கும் திட்டத்திற்கு நிதியை எதிர்பார்த்து, நீர்வளத்துறையினர் காத்திருக்கின்றனர்.நீர்வளத்துறையின் பராமரிப்பில் மாநிலம் முழுதும், 14,140 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில், 2,040 ஏரிகளும், சிவகங்கையில், 1,459, மதுரையில், 1,340, புதுக்கோட்டையில், 1,132 ஏரிகளும் உள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு பின், 4,021 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன; 4,183 ஏரிகள், 76 முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளன. தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 233 ஏரிகள், கோடைக்கு முன்னரே வறண்டு கிடக்கின்றன. எஞ்சியுள்ள ஏரிகளும் கோடை முடிவதற்குள் வறண்டு விடும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டம், 'நபார்டு' வங்கியின் கடனுதவி பெற்று செயல்படுத்தப்பட்டது. அதில், 3,000 கோடி ரூபாய் செலவில், 5,000க்கும் மேற்பட்ட ஏரி கள் புனரமைக்கப்பட்டன. கடந்த மூன்றரை ஆண்டுகளாக, ஏரிகளை புனரமைக்க தி.மு.க., அரசு நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் ஏரிகளை புனரமைக்கும் திட்ட நிதியும் கைக்கு வரவில்லை. இதனால், மாநிலம் முழுதும் பல ஏரிகள் முறையான பராமரிப்பின்றி கிடக்கின்றன. அத்துடன், பல ஏரிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை கிடங்காகவும், தொழிற்சாலைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கும் இடமாகவும் மாறியுள்ளன. நடப்பாண்டு கோடை காலத்தில், 2,500 ஏரிகளை புனரமைக்க, நீர்வளத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நிதி நெருக்கடியை காரணம் காட்டி, நிதித்துறை மறுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !