| ADDED : ஜூலை 13, 2011 01:09 AM
சென்னை : பிளஸ் 2 உடனடித்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இம்மாத இறுதி வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை, ஏழு லட்சத்து 16 ஆயிரத்து 543 பேர் எழுதினர். இவர்களில், ஆறு லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து 950 பேர் தோல்வியடைந்தனர். 'ரெகுலர்' மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் ஆகிய பிரிவினரும் சேர்த்து, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 602 பேர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, ஜூன் 22ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை உடனடித்தேர்வுகள் நடந்தன. விடைத்தாள்கள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இந்தப் பணிகள், 17ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன்பின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்ததும், 20ம் தேதிக்குப்பின் முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.