உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி நடைபயணத்தை தடைசெய்ய வேண்டும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அடுத்த அதிரடி

அன்புமணி நடைபயணத்தை தடைசெய்ய வேண்டும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அடுத்த அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்: 'தமிழகத்தின் வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், அன்புமணியின் உரிமைமீட்பு நடை பயணத்தை தடைசெய்ய, தமிழக டி.ஜி.பி.,யிடம் மனு அளித்துள்ளார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். திண்டிவனம் தைலாபுரத்தில் ராமதாஸ் அளித்த பேட்டி: பா.ம.க.,வின் புதிய தலைவராக, கடந்த மே மாதம் 30ம் தேதி, நான் மீண்டும் பொறுப்பேற்றேன். அதைத் தொடர்ந்து, கட்சியை புனரமைக்க புதிய நியமனங்களை செய்து வருகிறேன். அதற்காக கட்சியின் செயற்குழு, நிர்வாக குழு கூட்டங்கள் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பா.ம.க.,வின் தலைமை அலுவலகம் சென்னையில் இருந்ததை மாற்றி, கடந்த மே., மாதம் 30ம் தேதி முதல் தைலாபுரம் தோட்டத்திலேயே இயங்க வைத்திருக்கிறேன். இதை பா.ம.க.,வினர் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் எந்த விஷயமாக இருந்தாலும், தொண்டர்கள், நிர்வாகிகள் தைலாபுரத்துக்குத்தான் வர வேண்டும். பா.ம.க.,வுக்கு வேறு எங்கும் தலைமை அலுவலகம் கிடையாது. அப்படி வைத்திருந்தால், அது சட்டத்துக்குப் புறம்பானது. பா.ம.க.,வின் புதிய தலைமை நிலைய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர் பொறுப்பு, கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் கவுரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அன்புமணி, பொருளாளராக சையத் மன்சூர் உசேன், பொதுச் செயலராக முரளிசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவரவர் அவரவர் பணிகளை மேற்கொள்கின்றனர். இத்தகவல் முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கும், மற்ற துறைகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில், யாரும் அவர்களுடைய பணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. அந்த பணிக்கு நான் தான் பொறுப்பாளர் என யார் கூறினாலும், கட்சி விதிகள்படி அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீறுவோர், கட்சியில் இருந்து நீக்கப்படுவர். பா.ம.க.,வின் கொடியை, எனக்கு விரோதமாக செயல்படும் யாரும் பயன்படுத்தக்கூடாது. அனுமதியின்றி, என் பெயரை யாரும் எங்கும் பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ளேன். ஏன், தன்னுடைய பெயருக்கு பின் கூட, என் பெயரை பயன்படுத்தக் கூடாது என, அன்புமணிக்கு வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன். தேவையானால், இனிஷியலாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாம். அன்மணி, 25ம் தேதியிலிருந்து நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் அறிந்தேன். இந்த நடைபயணத்துக்கும், பா.ம.க.,வுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதனால், நடைபயணத்தை தடைசெய்ய வேண்டும் என, தமிழக டி.ஜி.பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். அன்புமணி, மேற்கொள்ளவிருக்கும் நடைபயணத்தால், வட தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படக் கூடும். இதை, காவல் துறை கவனத்தில் எடுத்துக்கொண்டு நடைபயணத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

அன்புமணியை நீக்க முடிவு?

ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அன்புமணி இன்று முதல், தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை திருப்போரூரில் துவங்க உள்ளார். தொடர்ந்து 100 நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், நடைபயணத்தை தடை செய்ய வேண்டும்; நடைபயணத்தின் போது வடமாவட்டங்களில் சட்டம் -ஒழுங்கு பாதிக்கப்படும் என்று ராமதாஸ் நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டி.ஜி.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இனியும், நான்தான் பா.ம.க.,வின் தலைவர் என்று அன்புமணி மீண்டும் கூறினால், அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவிற்கு, ராமதாஸ் வந்துவிட்டதாக, கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இனி போலீசார் பார்த்துக் கொள்வர்!

என் பெயரை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தும், அன்புமணி பயன்படுத்தி வருகிறார். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரு மோசமான நிகழ்வு நடந்துள்ளது. நான் உட்காரும் இடத்திற்கு அருகில், ஒட்டுக்கேட்பு கருவி வைத்திருந்தனர். அதை கண்டுபிடித்து, கருவியை காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கிறோம். அந்த கருவி இங்கிலாந்தில் வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பத்து நாளைக்கு ஒருமுறை அதை சார்ஜ் செய்ய வேண்டும். அதை வைத்தது யார் என்பது குறித்த தீவிர விசாரணை நடக்கிறது. ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார் என கேட்டால், அது எனக்கு நன்கு தெரியும். யார், எதற்காக அதை வைத்தனர் என்பதையெல்லாம் கூட துல்லியமாக அறிவேன். போலீஸ் விசாரணை நடக்கிறது. அதனால், இப்போதைக்கு விபரங்களை வெளியிடக்கூடாது. இதுநாள் வரை, வேறு எந்தத் தலைவருக்கும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதில்லை. தன் நடைபயணத்துக்கு, அன்புமணி என்னிடம் அனுமதி பெறவில்லை. போலீசாருக்கு அதை தெரிவித்துவிட்டேன். மீறி எதுவும் நடந்து பிரச்னையானால், போலீசார் அதைப் பார்த்துக் கொள்வர். - ராமதாஸ், நிறுவனர் பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sekar ng
ஜூலை 25, 2025 15:12

தன் மகனிடமே இனக்காமகாத Dr. ராமதாஸ். எப்படி தன் ஜாதி மற்றும், மற்றவர்களுடன் இணைவார். ஒதுங்கி வழிவிட்டு உதவ வேண்டும்


கல்யாணராமன் சு.
ஜூலை 25, 2025 14:10

வழக்கமா வியாழக்கிழமைலதான் அறிக்கை விடுவாரு , பேட்டி கொடுப்பாரு .... இந்த தரம் என்ன ஒரு நாள் லேட்டாயிடிச்சு ?


Premanathan S
ஜூலை 25, 2025 13:34

இவர் கட்சிக்காரர். இவரது மகன் வேறு இவரை தடை செய்ய, கட்சியை விட்டு நீக்க இவரால் முடியாதா? போலீஸ் உதவி கேட்பது அசிங்கம்


Kjp
ஜூலை 25, 2025 11:44

இப்படி ஒரு தந்தையும் இருக்கிறாரே என்று பாமகவினர் எண்ணி பார்க்க வேண்டும்.மகனின் வளர்ச்சியை ஒடுக்க நினைக்கும் விநோத தந்தை.


Anand
ஜூலை 25, 2025 11:30

திராவிட கட்சிகள் பிரிந்தபோதும் இப்படி யாரும் அடித்துக்கொண்டதில்லை..


Arjun
ஜூலை 25, 2025 10:50

சட்ட ஒழுங்கு சீர் கேட்டு போகுமாம்? அதைபற்றி காவல் துறைதான் கவலைப்படவேண்டும் இவர் ஏன் கவலைகொள்ளுகிறார் அன்புமணிக்கு ஆதரவு அதிகமாகிவிடும் என்றா?


மரம் வெட்டி
ஜூலை 25, 2025 07:58

அன்றைக்கே மரம் வெட்டுவதை தடை செய்திருந்தால் பா ம க அப்டின்னு ஒரு கட்சியே இருக்காது...


S Balakrishnan
ஜூலை 25, 2025 07:57

உளறுவதற்கு எல்லை இல்லாமல் போய் விட்டது.


mohana sundaram
ஜூலை 25, 2025 06:29

வயது ஏற ஏற அறிவு ஏறும் என்று கூறுவார்கள் ஒரு சிலருக்கு வயது ஏற ஏற அறிவு குறைந்து கொண்டு வந்து....டாளாக மாறி விடுகிறார்கள்.


சமீபத்திய செய்தி