உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உணவு படைக்கும் கடவுள்களை போராட தூண்டாதீர்கள்; ராமதாஸ் வேண்டுகோள்

உணவு படைக்கும் கடவுள்களை போராட தூண்டாதீர்கள்; ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: உணவு படைக்கும் கடவுள்களை போராட தூண்டாதீர்கள் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிசயங்கள் எப்போதாவதுதான் நிகழும். அப்படி நிகழ்ந்தால் தான் அதற்கு அதிசயம் என்று பொருள். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் இதில் விலக்கு உண்டு. பா.ம.க., எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ, அப்போதெல்லாம் அதிசயங்கள் நிகழும். அந்த வரிசையில் தான் திருவண்ணாமலையில் விவசாயிகள் பேரியக்க மாநாடு என்ற பெயரில் மாபெரும் அதிசயம் நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. அமாவாசையிலிருந்து முழு நிலவு உருவாக தேவைப்படும் அதே 28 நாட்களில் இந்த அதிசயம் நிகழ்த்தப்பட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது. உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள் விவசாயிகள் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலையாய தத்துவம். ஆனால், கடவுள்களான விவசாயிகளின் இன்றைய நிலையோ சபிக்கப்பட்டதாகவே இருக்கிறது. அவர்களின் கோரிக்கைகளை உரத்து ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தமிழக விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு சனிக்கிழமை மிகவும் பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.மாநாட்டில் மொத்தம் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்தையும் பகுத்தும், தொகுத்தும் 10 கோரிக்கைகளாக வடிவமைத்து இருக்கிறோம். அவற்றின் விவரம் வருமாறு: 1. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 கொள்முதல் விலை உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும்.2. கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விளைபொருள்களையும் கொள்முதல் செய்வதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம் அமைக்க வேண்டும். 3. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் இழந்த 40 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை மீட்டெடுக்கும் வகையில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசனத் திட்டங்களை அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும். 4. நிலக்கரி சுரங்கம், சிப்காட் வளாகங்கள், அறிவுசார் நகரம் உள்ளிட்ட எதற்காகவும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நீர்நிலைகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். 5. விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்துடன் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும். 6. இயற்கைப் பேரிடர்களில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அவற்றுக்கு இழப்பீடு வழங்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிலையான கொள்கை வகுக்கப்பட வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் அதிகபட்ச காப்பீடு வழங்க வகை செய்ய வேண்டும். 7 விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25,000 கோடிக்கு வேளாண் பயிர்க்கடன்கள் வழங்கப் பட வேண்டும். கடந்த காலங்களில் வாங்கப்பட்டு, செலுத்தப்படாத பயிர்க்கடன்களை அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.8. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். 100 நாள்கள் வேலைத் திட்டத்தை தனியார் விளைநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும். 9. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். 10. கருவேல மரங்களை அழித்து விட்டு, பனை மரங்களை நடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் தேவையானவை. இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் விவசாயிகள் திருவண்ணாமலைக்கு திரண்டு வந்தனர் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை ஏற்பதாக தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை