கடைசி நாளிலும் ராஜ்யசபா செல்லாத பா.ம.க., அன்புமணி
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவி நேற்று முடிந்த நிலையில், கடைசி நாளான நேற்று, அவர் ராஜ்யசபா நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., தலைவர் அன்புமணி, தி.மு.க.,வின் அப்துல்லா, சண்முகம், வில்சன், அ.தி.மு.க.,வின் சந்திரசேகரன் ஆகிய, ஆறு பேரின் பதவிக்காலம் நேற்று முடிந்தது. இதில், வில்சன் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ளார். பதவிக் காலம் முடியும் எம்.பி.,க்களுக்கு, ராஜ்யசபாவில் நேற்று பிரிவு உபசார விழா நடந்தது. இதில், வைகோ உள்ளிட்ட நான்கு தமிழக எம்.பி.,க்களும் பேசினர்; அன்புமணி சபைக்கு வரவில்லை. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21ல் துவங்கியது. நேற்று வரை நான்கு நாட்கள் பங்கேற்க வாய்ப்பிருந்தும் அன்புமணி வரவில்லை. கடந்த ஏப்ரலில் நடந்த கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த 2024 டிசம்பரில், 15 நாட்கள் நடந்த கூட்டத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே அன்புமணி பங்கேற்றுள்ளார். இன்று மக்கள் உரிமை மீட்புப் பயணம் துவங்க உள்ளதால், ராஜ்யசபா கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கவில்லை என, பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.