உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் புகார் கொடுப்பதால் போக்சோ வழக்கு அதிகரிப்பு

பெண்கள் புகார் கொடுப்பதால் போக்சோ வழக்கு அதிகரிப்பு

சென்னை:''பாதிக்கப்பட்ட பெண்கள், துணிந்து புகார் கொடுப்பதால்தான், போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:அனைத்து சட்டங்களும், நீதியை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். சட்டமும், நீதியும் இணைந்து செயல்பட்டால் தான், சமூகம் அமைதியாக, வளமாக இருக்கும். சட்டம் என்பது சமூக மாற்றத்தின் கருவி. வளர்ந்து வரும், சமூக தேவைகளுக்கு ஏற்ப, புதுமையான, முற்போக்கான சட்டங்களை இயற்றுவதில், சட்டத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சட்ட ஆணைய பரிந்துரையின்படி, இதுவரை 217 முதன்மை சட்டங்கள், 919 திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. எந்த மனிதனும் பிறக்கும்போதே, குற்றவாளிகளாக பிறப்பதில்லை. ஒரு மனிதனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் உருவாக்குவது சமுதாயம்தான். குற்றம் செய்தவர்களை திருத்தி, சமுதாயத்தோடு இணைந்து வாழும் வழியை உருவாக்கும் இடமாக, தமிழக சிறைகள் உள்ளன. நல்ல கருத்துகளை சொல்லித் தரும் பாடசாலைகளாக, சிறைகள் மாற்றப்பட்டுஉள்ளன.சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில், கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2024- - 25ல், 135 பேர் பிளஸ் 2; 137 பேர் பிளஸ் 1; 247 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, சிறைகளில் இருந்து எழுதினர். இந்த ஆண்டு 9,106 சிறைவாசிகள், பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். சிறைகளில் நுாலகங்கள், சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று, 1,500 புத்தகங்களை வழங்கினார்.தி.மு.க., அரசு, பெண்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு தைரியத்தை தந்து, அச்சத்தை போக்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால், உடனே வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால்தான், தமிழகத்தில் 'போக்சோ' வழக்குகள் அதிகரித்து உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை