வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க மறுப்பு எதிர்த்து கவிஞர் கண்ணதாசன் மகன் வழக்கு
சென்னை:மாடம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து, மறைந்த கவிஞர் கண்ணதாசனின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக மின் வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாடம்பாக்கம் கிராமத்தில், மறைந்த கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு, 1.72 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை, 1988ல், தன் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்தார். இந்த நிலத்திற்கு அருகேயுள்ள, அரசு புறம்போக்கு நிலத்தில், தமிழக மின் வாரியத்தின் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகே காலியாக இருந்த பகுதியை, கவிஞர் கண்ணதாசனின் குடும்பத்தினர், தங்கள் நிலங்களுக்கு செல்ல பாதையாக பயன்படுத்தி வந்தனர். 2010ல் பாதையை பயன்படுத்தக்கூடாது எனக்கூறி, மின்வாரியம் தரப்பில் வேலி அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து, தாம்பரம் முன்சீப் நீதிமன்றத்தில், கண்ணதாசனின் மகன்கள் தொடர்ந்த வழக்கில், துணை மின் நிலைய பகுதியில் உள்ள காலி நிலத்தை, பாதையாக பயன்படுத்த அனுமதித்து, 2011ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்பிறகு, தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட, மின் இணைப்பு கோரி, கண்ணதாசனின் மகன்களில் ஒருவரான அண்ணாதுரை கண்ணதாசன் விண்ணப்பித்தார். மின் வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை, பாதையாக பயன்படுத்துவதாகக் கூறி, மின் வாரியம் மின் இணைப்பு வழங்க மறுத்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாதுரை கண்ணதாசன் வழக்கு தொடர்ந்தார்.மனுவில், 'தாம்பரம் முன்சீப் நீதிமன்ற உத்தரவின்படி, தங்கள் நிலம் உள்ள பகுதிக்கு செல்ல, காலி நிலத்தை பாதையாக பயன்படுத்த அனுமதி கோரி, மின் வாரிய தலைவர், மின் வாரியத்தின் கிழக்கு தாம்பர உதவி பொறியாளர் ஆகியோரிடம், கடந்த மாதம், 4ம் தேதி மனு அளித்துள்ளேன். 'அதை பரிசீலித்து மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதி என்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ''பாதையை பயன்படுத்த, தாம்பரம் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதால், மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, துணை மின் நிலையம் அருகே உள்ள நிலத்தை பாதையாக அறிவிக்க வேண்டும்,'' என்றார். இந்த வாதத்தை அடுத்து, மனுவுக்கு தமிழக மின் வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.