சவுதியில் தவிக்கும் பெண்ணை மீட்க போலீஸ் முயற்சி
சென்னை:சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, 30 வயது பெண் ஒருவர், அங்குள்ள ஏஜென்டிடம் சிக்கித் தவிப்பதாக, 'வீடியோ' வெளியாகி உள்ளது. அதில், அந்த பெண் கதறல் சத்தமும் கேட்கிறது. அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால், அந்த பெண் யார், தமிழகத்தைச் சேர்ந்தவரா என்ற விபரங்களை, 'என்.ஐ.ஆர்., செல்' எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன் காக்கும் பிரிவு போலீசார் திரட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில், அந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் கூறுகையில், 'வீடியோவில் தொடர்பு எண் உள்ளது. அது யாருடையது என்ற அடிப்படையில் விசாரணை நடக்கிறது. அப்பெண் விரைவில் மீட்கப்படுவார்' என்றனர்.