திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் நேற்று உடல் முழுதும் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். உயிருக்கு ஆபத்து இருப்பதாக, மாவட்ட எஸ்.பி., சிலம்பரசனுக்கு, அவர் ஐந்து பக்க கடிதம் எழுதியும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதால் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது என, கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்து புதுாரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், 58; நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். இவரது மனைவி ஜெயந்தி. இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இவர் மூன்று ஆண்டுகளாக இப்பதவியில் இருந்தார். கடந்த 2ம் தேதி மாலை முதல் இவரை காணவில்லை என, அவரது மகன் கருத்தையா ஜெப்ரின், 3ம் தேதி மாலை உவரி போலீசில் புகார் அளித்தார்.கடிதம்
போலீசார் விசாரணையை துவங்கும் போது, ஜெயக்குமார் தன் லெட்டர் பேடில் எழுதிய ஐந்து பக்க கடிதம் வெளியானது.திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசனுக்கு அவர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுத்து தன் சொத்துக்களை மீட்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் முடித்துள்ளார்.
அந்த கடிதம் வெளியானதால், அவரை யாரோ கடத்தி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே, கரைச்சுத்து புதுாரில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு பின்புறம் உள்ள அவரது தென்னந்தோப்பில், முழுதும் எரிந்து கரிக்கட்டை போல ஜெயக்குமார் உடல் கிடந்தது.சம்பவ இடத்தில் போலீசார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா, தீக்குளித்து இறந்தாரா என்ற சந்தேகம்ஏற்பட்டது.இடுப்பிலும், கால்களிலும் கம்பி சுற்றப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் உவரி போலீசார் விசாரித்தனர்.அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் எம்.பி., ராமசுப்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை அவரது உடல் அடக்கத்திற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஆறு பேர் பெயர்
ஜெயக்குமார் ஏப்ரல் 30ல் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி., சிலம்பரசனுக்கு எழுதிய, 'மரண வாக்குமூலம்' என தலைப்பிட்டுள்ள ஐந்து பக்க கடிதத்தில் கூறியுள்ளதாவது: எனக்கு சமீபகாலமாக கொலை மிரட்டல்கள் வருகின்றன. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கண்டு கொள்ளவில்லை. மூன்று முறை என் வீட்டு வளாகத்தில் இரவு நேரங்களில், ஆள் நடமாட்டம் சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. திருட வந்தவர்களாக இருக்கும் என்று பெரிதுபடுத்தவில்லை. ஆனால், எனக்கு ஏதாவது நேர்ந்தால், கீழ்க்கண்டவர்களின் சதியாக இருக்கும் என்று சந்தேகப்படுகிறேன் என்று கூறி, ஆறு நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார்.கடிதத்தில் முதலாவது நபராக, கள்ளிகுளம் முன்னாள் கோவில் தர்மகர்த்தாவான, ஊராட்சி தலைவர் ஆனந்த ராஜாவை குறிப்பிட்டுள்ளார். ஆனந்த ராஜா, 18 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் பெற்ற, 46 லட்சத்திற்கு வள்ளியூரில் 7.8 ஏக்கர் நிலத்தை என் பெயருக்கு எழுதி கொடுத்தார்.தற்போது நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்டதால், ஏதோ காரணங்கள் சொல்லி அதே விலைக்கு திரும்பத் தரும்படி வற்புறுத்துகிறார்; மிரட்டினார். 'நான் பாம்பே ரவுடி... கொலை செய்து விடுவேன். உன் குடும்பத்திற்கு ஆபத்து வரப்போகிறது' என்றும் மிரட்டி வருகிறார். சில நபர்களை வேண்டுமென்றே துாண்டிவிட்டு மேற்படி சொத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். எனவே, ஆனந்தராஜாவால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது.ஜெயக்குமார் எழுதி உள்ள கடிதத்தில், இரண்டாவது நபராக ஓய்வு பெற்ற குத்தாலிங்கம் என்பவர் பெயரை குறிப்பிட்டுள்ளார். 15 ஆண்டிற்கு முன் நான் அவரிடம் வாங்கிய பணத்தை வட்டியோடு திரும்ப செலுத்திய பிறகும், பழைய காசோலைகளை கொண்டு, 'அதற்கு வழக்கு தொடர்வேன்; கொலை செய்வேன்' என, பலமுறை மிரட்டி உள்ளார்; அவராலும் எனக்கு ஆபத்து உள்ளது.மூன்றாவது நபராக இடையன்குடியைச் சேர்ந்த சி.சி.எம்., பள்ளி தாளாளர் ஜெய்கர் பெயரை தெரிவித்துள்ளார்.அந்தப் பள்ளிக்கட்டடம் கட்டித் தந்த வகையில் எனக்கு வர வேண்டிய பாக்கித்தொகை, 30 லட்சம் ரூபாயை தராமல், தர விடாமல் தடுத்து வருகிறார்.நேரில் கேட்டதற்கு, 'அப்பாவு எம்.எல்.ஏ., தான் இதை முடிவு செய்ய வேண்டும். அவரிடம் பேசுங்கள். மீறி செயல்பட்டால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று மிரட்டினார்.இதுகுறித்து, தபால் அனுப்பி பணம் கேட்டேன். 'உன்னுடைய நடவடிக்கை கொலையில் தான் முடியும்' என்று மிரட்டினார் என, குறிப்பிட்டுள்ளார்.நான்காவது நபராக நாங்குநேரி காங்., --எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் பெயரை குறிப்பிட்டுள்ளார். நாங்குநேரி எம்.எல்.ஏ., மூன்று ஆண்டுகளாக என்னிடம் நிறைய காரியங்கள் செய்து தருகிறேன் என்று, 70 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கினார். ஆனால், எந்த காரியமும் செய்து தரவில்லை. அவர் சொன்னபடி, எந்த கான்ட்ராக்ட் வேலையும் தரவில்லை. தற்போது எம்.பி., தேர்தலிலும், என்னை செலவு செய்ய சொன்னார். 8 லட்சம் ரூபாய் செலவு செய்தும், அந்தப் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார். பணத்தை திரும்ப கேட்டதற்கு, 'கொலை செய்வேன்' என்று ஒருவர் வாயிலாக மிரட்டி வருகிறார். எனவே, அவராலும் என் உயிருக்கு ஆபத்து உள்ளது.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு; தேர்தல் வேலைக்கு என்னிடம் பணம் பெற்றார்; செலவு செய்ய வைத்தார். அவர், '11 லட்சத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.,விடம் வாங்கிக்கொள்' என, சொல்லிவிட்டு சென்றார். ஆனால்,எம்.எல்.ஏ.,விடம் பணம் கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார்.ஆறாவது நபராக கிரஷர் நிறுவனம் நடத்தும் புதியம்புத்துார் ஜேசுராஜாவை குறிப்பிட்டுள்ளார். அவர் தந்தையுடன், 30 ஆண்டுகள் அக்ரிமென்ட் போட்டு தார் தயாரிக்கும் தொழில் நடந்தது.சில ஆண்டுகளாக வேலை இல்லை. எனக்கு தெரியாமல் மேற்படி நிறுவன பொருட்களை, 24 லட்சத்திற்கு வேறு நபருக்கு அவர் விற்றுவிட்டார். கேள்வி எழுப்பினர்
நான் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 'அது எனக்கு சொந்தம்; முடிந்ததை செய்து கொள்' என்று சொல்லிவிட்டார். இந்த லோக்சபா தேர்தல் காலத்தில், 40 நாட்களாக எனக்கு பல்வேறு நபர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. எனக்கு ஏதாவது உயிருக்கு ஆபத்து நேரிட்டால், மேற்படி நபர்கள் தான் பொறுப்பு என, உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் மேற்கண்ட என்னை வஞ்சித்து ஏமாற்றி எடுத்துக் கொண்டதை, என் குடும்பத்தினருக்கு பெற்று தர வழிவகை செய்யும்படியும், அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என, குறிப்பிட்டுள்ளார். ஏப்., 30ம் தேதியே இது குறித்து எஸ்.பி.,க்கு புகார் அளித்தும், போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, பலரும் கேள்வி எழுப்பிஉள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதுாரில் இன்று நடக்கும் அவரது இறுதி சடங்கில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
கிராமத்தினர் போராட்டம்
கரை சுத்துப்புதுாரில் கிராம மக்கள் ஜெயக்குமார் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த புகார் கடிதம் கிடைத்த உடனே நடவடிக்கை எடுத்திருந்தால், அவரது இறப்பை தடுத்திருக்கலாம்' என்றனர். சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி. மூர்த்தி, எஸ்.பி., சிலம்பரசன் ஆகியோர்வந்திருந்தனர்.
ஏழு தனிப்படைகள்
நெல்லை எஸ்.பி., சிலம்பரசன் கூறுகையில், ''இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புலன் விசாரணை நடக்கிறது.சமூக வலைதளங்களில் பரவும் ஜெயக்குமார் எழுதிய கடிதம் எங்களுக்கு முன்பே கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் மாலையில் தான் அவரது உதவியாளர் இந்த கடிதத்தை தந்தார்,'' என்றார்.கரைச்சுத்துபுதுார் வீட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தி.மு.க.,வினர், அ.தி.மு.க., லோக்சபா வேட்பாளர் ஜான்சி ராணி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கூடியிருந்தனர்.