ரவுடிகளின் ஜாமின்தாரர்கள் 21 பேருக்கு போலீஸ் வலை
சென்னை:ரவுடிகள் சிறையில் இருந்து வெளியே வர காரணமாக இருந்த ஜாமின்தாரர்கள், 21 பேரை, போலீசார் தேடி வருகின்றனர். ரவுடிகளுக்கு எதிராக, ஒ.சி.ஐ.யு., எனப்படும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, வாரந்தோறும், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆய்வு கூட்டம் நடத்தி, தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஆய்வு கூட்டத்தில், தீவிர செயல்பாட்டில், 550 ரவுடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இதுபோன்ற ரவுடிகள் ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது, அவர்களுக்கு ஜாமின் கொடுத்தவர்களின் தகவல்களையும், போலீசார் திரட்டி வருகின்றனர். அந்த வகையில், தலைமறைவாக இருக்கும் ரவுடிகளுக்கு ஜாமின் கிடைக்க கையெழுத்திட்ட, 21 பேரை, போலீசார் தேடி வருகின்றனர். தொடர் விசாரணையில், இவர்கள் ரவுடிகளிடம் பணம் பெற்று, அவர்களின் சட்ட விரோத செயல்களுக்கு துணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ரவுடிகள் தொடர்பான குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என, இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்., வரை, 1,325 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி உள்ளனர். இதன் வாயிலாக, பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் குறைந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.