பேரணிக்கு அனுமதி மறுத்ததால் பாதிப்பு என ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது கிருஷ்ணசாமி வழக்கில் போலீஸ் பதில் மனு
சென்னை: 'பேரணிக்கு அனுமதி மறுத்தததால் ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது' என, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் தாக்கல் செய்த மனுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை பதிலளித்துள்ளது.புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு:திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கடந்தாண்டு நவம்பர், 7ல், சென்னை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி நடத்த அனுமதி கோரி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பிக்கப்பட்டது.கடந்தாண்டு அக்டோபரில் விண்ணப்பம் அளித்த நிலையில், குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் பேரணிக்கு அனுமதியில்லை என்பதால், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து பேரணி நடத்தும் வகையில், வழித்தடத்தை மாற்றிக் கொள்ளும்படி, போலீசார் அறிவுறுத்தினர்.அதன்படி, நவம்பர், 7ல் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நேரடியாக சென்று, கவர்னரை சந்தித்து மனு அளிப்பது என அறிவித்த நிலையில், முந்தைய நாளான நவ., 6ல் பேரணிக்கு அனுமதி மறுத்து, போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரின் செயலால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவுக்கு, திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:போராட்டத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது தொடர்பாக, பல்வேறு விவரங்களை அளிக்கும்படி கோரப்பட்டது. அதற்கு எவ்வித பதிலும் அளிக்காததால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், அனுமதியின்றி பேரணிக்கு அனுமதி அளித்தால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அனுமதியின்றி கூடிய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.பேரணி நடக்காததால் ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது. இதற்கு, காவல் துறை எந்த விதத்திலும் பொறுப்பல்ல. பொதுமக்களின் நலன் கருதியே, பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த பதில் மனுவை பதிவு செய்த நீதிபதி பி.வேல்முருகன், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.