விக்கிரவாண்டி:தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில், 100 அடி உயர கொடி கம்பம் நிறுவப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை நடக்கிறது. மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.இதற்காக மாநாட்டு முகப்பில், கொடி கம்பம் நடுவதற்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த மணி என்பவரின் இடத்தில், 225 சதுர அடி இடத்தை 5 ஆண்டிற்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர். அந்த இடத்தில் நேற்று, 100 அடி உயர கொடி கம்பம், கிரேன் உதவியுடன் நிறுவப்பட்டது.முன்னதாக, கொடிக்கம்பத்திற்கு, கட்சி நிர்வாகிகள் பூஜை செய்தார். மாநாட்டு மேடையில் இருந்து நடுவே அமைத்துள்ள ரேம்ப்பில் கட்சி தலைவரான விஜய் நடந்து வந்து, 30 அடி உயரம், 20 அடி அகல கட்சி கொடியை 'ரிமோட்' மூலம் ஏற்றி வைக்க உள்ளார். மாநாட்டு நிகழ்வுகளை பார்வையாளர்கள் எளிதாக பார்க்கும் வகையில் 600 பெரிய எல்.இ.டி., திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவர் என எதிர்பார்த்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.இதுதொடர்பாக, நேற்று சித்தணி இ.எஸ்., கல்லுாரியில் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் டி.ஐ.ஜி., திஷா மிட்டல், எஸ்.பி., தீபக் சிவாச் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாநாட்டிற்காக புறவழிச்சாலையில் இருபுறமும் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை போலீசார் அப்புறப்படுத்த கூறினர். இதற்கு விஜய் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க, மாநாட்டுக்கான அனுமதி நிபந்தனையில் கட் - அவுட் வைக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளதை போலீசார் தெளிவுப்படுத்திய பின், பேனர்களை அப்புறப்படுத்த ஒப்புக் கொண்டனர்.